நடனம் ஆடுவதை குறைத்துகொள்வேன் : சினேகா முடிவு!!!

Thursday,28th of February 2013
சென்னை::நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களை ஏற்பேன். நடனம் ஆடி நடிப்பதை குறைத்துக்கொள்வேன் என்றார் சினேகா. இதுபற்றி சினேகா கூறியது: ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகிவிட்டால் அதன்பிறகு அவர்களுக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வராது என்ற எண்ணம் கோலிவுட்டில் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அது உண்மை இல்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. திருமணத்துக்கு பிறகும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. பிடித்த கேரக்டருக்காக காத்திருந்தேன். அப்போதுதான் ஹரிதாஸ் பட வாய்ப்பு வந்தது. பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் போன்ற படங்களில் அமைந்ததுபோல் இதிலும் நடிப்பதற்கு அதிக வாய்ப்பிருந்தது.

கார்ப்பரேஷன் பள்ளி டீச்சர் வேடம். ஆட்டிஸம் மூளை பாதிப்புள்ள சிறுவன் மீது அன்பு காட்டும் வேடம். இக்கதையை என்னிடம் இயக்குனர் குமரவேலன் கூறும்போதே நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தேன். எனது நிஜ குணாதிசயங்களில் 50 சதவீதம் இந்த கேரக்டரோடு ஒத்துப்போனது. இந்த கதாபாத்திரத்துக்கு மேக் அப் போடக்கூடாது என்றனர். மேக் அப் அணியாமல் ஏற்கனவே நடித்திருக்கிறேன். அதை ஏற்றுக்கொண்டேன். மேலும் எனது தோல் நிறத்தையும் சற்று குறைக்க வேண்டி இருந்தது. மேலும் காஸ்டியூமும் பளிச்சென்று இல்லாமல் டல்லான கலர் அணிந்தேன். நடனம் ஆடியும், பாட்டுப்பாடியும் நிறைய நடித்துவிட்டேன். இனிமேல் அதை குறைத்துக்கொண்டு நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில நடிப்பேன்’ என்றார்.

Comments