நான் நடிச்ச படத்துக்கு ஆஸ்கர்’ புதுவை மாணவன் உற்சாகம் : ‘லைப் ஆப் பை’யில் ஹீரோவுக்கு டூப்!!!

Tuesday,26th of February 2013
சென்னை::நான்கு ஆஸ்கர் விருதுகள் வென்றிருக்கும் ‘லைப் ஆப் பை’ படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது என்று ஹீரோவுக்கு டூப்பாக நடித்த புதுவை மாணவன் கூறியுள்ளான். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 85வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. புதுச்சேரி வாலிபரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ‘லைப் ஆப் பை’ ஹாலிவுட் படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கின்றன. சிறந்த டைரக்ஷன், ஒளிப்பதிவு, விஷுவல் எபெக்ட், இசை என 4 பிரிவுகளில் இப்படம் ஆஸ்கர் வென்றிருக்கிறது. புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் பைசைன் மாலிட்டர். சுருக்கமாக ‘பை’. இவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் படம். 6 வயது சிறுவனாக கவுதம் பேலூர், 13 வயது சிறுவனாக ஆயுஷ் தாண்டன், 16 வயது சிறுவனாக சூரஜ் சர்மா, வளர்ந்த வாலிபனாக இர்பான் கான் என 4 பேர் ‘பை’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்தின் ஹீரோ ‘பை’ பள்ளி படிப்பு காட்சிகள் புதுச்சேரியில் உள்ள பொட்டானிக்கல் கார்டன், கல்வே காலேஜ், பெத்திசெமினார், முத்தியால்பேட்டை சர்ச், முல்லாவீதி மசூதி, வில்லியனூர் கோயில், புதுவை பெரிய மார்க்கெட், கீழூர் ஆலமரம், பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் என பல இடங்களில் படமாக்கப்பட்டது.

வகுப்பறையில் ‘பை’யுடன் மாணவர்கள் இருப்பதை காட்சியாக்க இயக்குனர் ஆங் லீ, புதுவை உப்பளத்தில் உள்ள ஆச்சாரியா பால சிக்ஷா மந்திர் மாணவர்களை தேர்வு செய்தார். ‘அதுதான் நான்.. அதுதான் நான்’ என்று சினிமாவில் தங்களை சுட்டிக் காட்டி பெருமைப்படுகிறார்கள் இந்த மாணவர்கள்.

9ம் வகுப்பு மாணவன் கணேஷ் கேசவ் அசப்பில் ஆயுஷ் போலவே இருப்பதால், பல காட்சிகளில் ஹீரோவுக்கு டூப்பாகவும் நடித்திருக்கிறார். இதுகுறித்து புதுச்சேரி காமராஜ் நகரில் வசிக்கும் மாணவன் கணேஷ்கேசவிடம் கேட்டபோது, ‘நாடகத்தில் நடிப்பது, இசை போட்டியில் கலந்து கொள்வதில் சிறு வயதில் இருந்தே எனக்கு ஆர்வம் உண்டு. லைப் ஆப் பை படத்தில் என் நடிப்பை டைரக்டர் ஆங் லீ வெகுவாக பாராட்டினார். ஹீரோவுக்கு டூப்பாக நான் நடித்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது. எனக்கே கிடைத்தது போல மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு கணேஷ் கூறினான். அடுத்ததாக குறும்படம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் கூறினான். இவனது தந்தை சொந்தமாக தொழில் செய்கிறார். தாய் ஆசிரியை.

Comments