படத்தைப் புகழும் ஜீவா! நடிகையைப் புகழும் விக்ரம்!!!

Wednesday, 9th of January 2013
சென்னை::பிஜாய் நம்பியார் இயக்கத்தில் ஜீவா, விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘டேவிட்’. இந்தி மற்றும் தமிழில் உருவாகியுள்ள டேவிட் படத்தின் இந்தி பதிப்பில் 15 பாடல்களும், தமிழ் பதிப்பில் 9 பாடல்களும் இடம்பெற்றுள்ளன. மூன்று இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணியாற்றியிருக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கும் பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் அளவு பாப்புலராகிவிட்டதால் டேவிட் படத்திற்கு ரசிகர்களிடையே எதிபார்ப்பு அதிகமாகிவிட்டது.

டேவிட் படம் பற்றி நேற்று பிறந்தநாள்கொண்டாடிய ஜீவா பேசுகையில் “நானும், விக்ரமும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் திரையுலகில் கால் பதித்து பத்து வருடங்கள் ஆகியிருந்தாலும் இதுவரை எந்த படத்திற்கும், டேவிட் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ரிஸ்க் எடுத்ததுபோல் கஷ்டப்பட்டு நடித்ததில்லை. ஒரே ஒரு காட்சிக்காக நான் 5 நாட்கள் பயிற்சி எடுத்தேன். அந்த அளவிற்கு இதில் உழைப்பை கொட்டியிருக்கிறோம். 2013-ஆம் வருடம் எனக்கு நல்ல துவக்கத்தை அளித்துள்ளது. இந்த வருடம் டேவிட், என்றென்றும் புன்னகை, யான் ஆகிய படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.

மூன்று படங்களின் கதை மேல் இருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன் கண்டிப்பாக எல்லா படமும் ஹிட் ஆகும்” என்று உறுதியுடன் பேசினார். மேலும் ஜீவா தனது பிறந்தநாளன்று பொதுமக்களுக்கு துணிகளும், அரிசியும் கொடுத்து உதவினார். டேவிட் படத்தில் நடித்த அனுபவம் பற்றி விக்ரம் வாயால் கேட்கலாம் என்றால் இசை வெளியீட்டு விழா முதற்கொண்டு மைக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் டேவிட் படத்தின் மூன்று கதாநாயகிகளில் ஒருவரான இஷா ஷர்வானி புகழையே பாடிக்கொண்டிருக்கிறாராம் விக்ரம்.

டேவிட் படக்குழுவிடமாவது படத்தில் விக்ரம் கேரக்டர் எப்படிப்பட்டது என்று கேட்டால் படப்பிடிப்பில் இஷா ஷர்வானியை விழுந்து விழுந்து கவனித்தார் என்று சொல்கிறார்கள். அட அது இல்லை டேவிட் படத்தில் எப்படிப்பட்ட கேரக்டர் என்று கேட்டால் தெரியவில்லை என்று கைவிரிக்கிறார்கள் படக்குழுவினர். டேவிட் படத்தில் விக்ரம் மீனவனாக நடிக்கின்றார். இரு ஹீரோக்களுக்கும் டேவிட் என்ற ஒரே பெயர் தானாம்.

Comments