அமெரிக்க அரசு சிறப்பு விருந்தினராக வருமாறு ரஜினிக்கு அழைப்பு!!!

Tuesday,9th of January 2013
சென்னை::சூப்பர் ஸ்டார் ரஜினியை தங்கள் அரசு விருந்தினராக வருமாறு அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் நூற்றாண்டுக்கொரு முறை வரும் 12.12.12 என்ற அபூர்வ தேதியில் அமைந்துள்ளதற்கு, மேரிலான்ட் மாகாண கவர்னர் திரு மார்ட்டின் ஓமாலி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, டாக்டர் ராஜன் வாசித்து அளித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கவர்னர் மார்ட்டின் ஓமாலி தனது வாழ்த்துரையில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, நீங்கள் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நீண்ட காலம் வெற்றிகரமாக திகழ்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த துறையில் பல சாதனைகளைச் செய்து, அளவிலா புகழை அடைந்துள்ளீர்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த பிறந்த நாள் வாழ்த்தின் மூலம் நீங்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும், எல்லா வளமும் பெற்று, உலகெலாம் பரவியிருக்கும் உங்கள் பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும் என்று எங்களின் மேரிலாண்ட் மாகாண அரசாங்க வாழ்த்துச் சான்றின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாழ்த்துச் சான்றை சூப்பர் ஸ்டாரிடம் டாக்டர் ராஜன் வழங்கினார். மேரிலாண்ட் அரசின் பிரதிநிதி டாக்டர் ராஜனின் வாழ்த்தையும் அழைப்பையும் ஏற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி, நிச்சயம் அமெரிக்காவுக்கு வருவதாகத் தெரிவித்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, சூப்பர் ஸ்டாரிடம் பல கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டார் டாக்டர் ராஜன்.

Comments