விஸ்வரூபம் படத்தை அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கின்றனர் : கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை!

Thursday,24nd of January 2013
சென்னை::கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள படம் ‘விஸ்வரூபம்Õ. இப்படம் தமிழகம் முழுவதும் நாளை ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களுக்கு கமல்ஹாசன் சமீபத்தில் படத்தை திரையிட்டு காட்டினார். படத்தை பார்த்த அவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றனர். இதை வலியறுத்தி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுதொடர்பாக தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் உள்துறை செயலரை சந்தித்து கமல் நேற்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் சில முஸ்லிம் அமைப்பினர் உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து புகார் அளித்தனர். அதன்மீது விசாரணை நடத்தும்படி அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட எஸ்பிக்களிடம் டிஜிபி விளக்கம் கேட்டார். அதன் அடிப்படையில் Ôபடத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்Õ என்று அரசுக்கு அறிக்கை தரப்பட்டது. இதைத் தொடர்ந்து திரை அரங்குகளில் அடுத்த 15 நாட்களுக்கு, ‘விஸ்வரூபம்‘ படத்தை வெளியிட வேண்டாம் என்று அந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என திரை அரங்கு உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் சார்பில் நேற்று அறிக்கை அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனக்காகவும், என் படத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர்களை எண்ணி நெகிழ்கிறேன். ஆனால், முஸ்லிம் நண்பர்களுக்கு எதிராக படம் இருப்பதாக கூறுவதை என்னால் ஏற்க முடியாது. ஒரு நடிகன் என்பதையும் தாண்டி மனிதநேயத்துக்காக எனது குரல் ஒலித்து கொண்டிருக்கிறது.

இந்து முஸ்லிம் அமைதிக்காக பணியாற்றும், Ôஹார்மனி இந்தியாÕ என்ற அமைப்பில் நான் அங்கம் வகிக்கிறேன். மதத்தை இழிவுப்படுத்தியதாக கூறும் குற்றச்சாட்டுகளால் என் மனம் மட்டும் புண்படவில்லை. என்னுடைய உணர்வுகளை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. அரசியல் ஆதாயங்களை தேடி கொள்வதற்காக சில சிறிய குழு என்னை அதற்கான கருவியாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றன. இப்படி செய்வதால் மற்றவர்கள் கவனத்தை அவர்கள் தன்பக்கம் ஈர்க்க முடியும் என்று எண்ணுகிறார்கள். இது ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் நடக்கிறது. நியாயமான, தேசப்பற்று மிக்க முஸ்லிம் யாரும் இப்படத்தை பார்த்தால் அவர்கள் நிச்சயம் பெருமைப்படுவார்கள். இந்த காரணத்துக்காகதான் இப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையை சட்டப்படி அணுகுவேன். இதுபோன்ற கலாசார தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக இணைய தளத்தில் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு என் நன்றி. இவ்வாறு கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

அரசு தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு

விஸ்வரூபம் படத்துக்கு அரசு விதித்த தடையை எதிர்த்து கமல்ஹாசன் சார்பில் இன்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் முன்பு மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி கூறியதாவது: விஸ்வரூபம் படம் 25ம் தேதி திரைக்கு வர தயாராக இருந்தது. இதற்கு தடை விதிக்க கோரி முஸ்லிம் அமைப்பினர் போலீசிடம் மனு கொடுத்தனர். இதை தொடர்ந்து விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில் வெளியிட 2 வாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு அனுமதி வழங்கிய பிறகு படம் வெளியிட தடை விதித்திருப்பது சட்டவிரோதமானது. படத்தை தடை செய்ய தணிக்கை குழுவுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. எனவே இந்த தடையை நீக்க வேண்டும். இதற்காக ஒரு அவசர மனு தாக்கல் செய்துள்ளோம். இதனை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வக்கீல் ராமன் கூறினார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். பிற்பகல் 1.30 மணிக்கு இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.

Comments