எனக்கு முகவரி தந்தது தமிழ் மண்! மனம் திறக்கும் லட்சுமி மேனன்!!!

Thursday,17th of January 2013
சென்னை::தமிழில் நடித்தது இரண்டு படங்கள் தான்; இரண்டும் பேசப்பட்டன. "கும்கி அல்லியும், "சுந்தரபாண்டியன் அர்ச்சனாவும் ரசிகர் மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள். யதார்த்தமான, "நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு என்று சொல்லத்தோன்றும் முகம். சோகம், மகிழ்ச்சி என களிநடனம் புரியும் கண்கள். அனுபவ நடிகை போன்று ஆச்சரியம் காட்டும் முகபாவனைகள்... தமிழ்த்திரை உலகிற்கு, மலையாள தேசத்தில் இருந்து வந்துள்ள புதுவரவு. அழகு தமிழ் பேசும், லட்சணமான தமிழ்ப்பெண்ணாக மாறிவிட்ட லட்சுமி மேனன், நம்மோடு மனந்திறக்கிறார்...

* கொச்சி நகரத்து பெண், உசிலம்பட்டி பெண் குட்டி ஆனது எப்படி?

நகரத்து பொண்ணான நான், உசிலம்பட்டி பெண்ணாக நடித்தேன் என்றால் அதற்கு காரணம் இயக்குனர் பிரபாகரன் தான். எனக்கு சினிமா தெரியும். நடனம், பாட்டு எல்லாம் தெரியும். என்றாலும் தமிழக கிராமத்து ஸ்டைல், ஆடைகள், பழக்கவழக்கங்கள் எல்லாம் எனக்கு புதிது. "தமிழச்சியாக மாற தமிழ் கற்றேன். தமிழ் நன்றாக பேசுவேன்; படிப்பேன்.

மலையாள வார இதழ் ஒன்றின் அட்டை படத்தை பார்த்து விட்டு, இயக்குனர் பிரபு சாலமன், "கும்கி படத்திற்காக அழைத்தார். சவாலான கதாப்பாத்திரம். என் நடிப்பை வெளிக்கொண்டு வந்தார் பிரபு சாலமன். இதற்கிடையே, சுந்தர பாண்டியன் முதலில் வெளியானது. இரண்டு படங்களும் அபார வெற்றி பெற்று, பத்து படங்கள் செய்த திருப்தியை ஏற்படுத்தி விட்டன. தமிழ் திரையுலகம் என்னை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

* எட்டாம் வகுப்பில் படிக்கும் போதே நடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்... "டாக்டர் ஆக ஆசைப்பட்டேன் என்று வழக்கமாக நடிகைகள் சொல்வது போல, அப்படி எல்லாம் ஆசை இருந்ததா?

டாக்டர் கனவு இல்லை. ஆனால் நன்றாக படிக்க வேண்டும், படித்து நான்கு விஷயங்களை தெரிந்து கொண்டால் தான் திரையுலகில் சாதிக்க முடியும். 8ம் வகுப்பு படிக்கும் போது, மலையாளத்தில் "ரகுவின்ற சொந்தம் ரசியா என்ற படத்தில் நடித்தேன். அப்போது, நடிப்பு பற்றி "சீரியசாக நினைக்கவில்லை. மாறாக, படிப்பை "சீரியசாக தொடர நினைத்த போது, "கும்கி வாய்ப்பு வந்தது. இப்போது மகிழ்ச்சியோடு நடிப்பு துறையை தேர்வு செய்துவிட்டேன். நிறைய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. சில மாதங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளேன்.

* திடீரென நடிகை ஆகி விட்டீர்கள்... நடிப்பதற்கு வீட்டில் "ஹோம் ஒர்க் செய்வீர்களா?

எனக்கு இப்போதும், "லொக்கேஷனில் இருந்து வீட்டிற்கு வரும் போது, பள்ளி சென்று வரும் "பீலிங் தான் உள்ளது. வந்தோமா... சாப்பிட்டோமா, தூங்கினோமா என்று இல்லாமல் நடிப்பிற்காக "ஹோம் ஒர்க் எல்லாம் செய்வது இல்லை.

* யாரைப் போல் நடிக்க ஆசை?

யாரையும் "காப்பி அடிக்க மாட்டேன். ஆனால் "ஹீரோயினை யாரும் மறந்து விடக்கூடாது. அப்படி "கும்கி படம், "பருத்தி வீரன் பிரியாமணி போன்ற சவாலான "கேரக்டர்களில் நடிக்க ஆசை.

* விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது எப்போது?

எனக்கு ஆசை தான்; அவர்கள் அழைக்க வேண்டாமா?

* மலையாளத்தில் மோகன் லாலுக்கு மகளாக, ஹீரோயினாக எதில் நடிக்க விரும்புவீர்கள்?

ஹீரோயின்

* மலையாளத்தில் இருந்து வரும் ஹீரோயின்கள் ஒன்றிரண்டு தமிழ்ப்படங்கள் நடித்து விட்டு, திரும்ப ஓடிப்போய் விடுவார்கள். நீங்களும் அப்படித்தானா?

எனக்கு முகவரி தந்தது தமிழ் மண். எனவே இங்கு நடிக்கவே விரும்புவேன். எனினும் அது, ரசிகர்கள் கையில் உள்ளது. தமிழ் ரசிகர்கள் தரமானவர்கள். குறை, நிறைகளை விமர்சனம் செய்ய தவறுவது இல்லை. எனது "பேஸ்புக் மூலம் இதனை தெரிந்து கொள்கிறேன்.

* கிராம பாங்கான கேரக்டர்களில் நடித்து வருகிறீர்கள். "கிளாமர் ஆக நடிப்பீர்களா?

கதைக்கு தேவை எனில், அதுவும் எனக்கு வசதிப்பட்டால், கிளாமர் ஆடைகள் எனக்கு பொருந்தினால் நடிப்பேன்.

Comments