கிராமத்திலிருந்த என்னை சென்னைக்கு அழைத்துச் சென்றது சினிமா... அந்த சினிமாவை சென்னையிலிருந்து கிராமத்துக்கு அழைத்து வந்தேன், பாரதிராஜா!!!

Monday,21st of January 2013
சென்னை::என்னை சென்னைக்கு அழைத்துச் சென்றது சினிமா... அந்த சினிமாவை சென்னையிலிருந்து கிராமத்துக்கு அழைத்து வந்தேன், என்றார் இயக்குநர் பாரதிராஜா.

பாரதிராஜா தயாரித்து இயக்கி வரும் அன்னக் கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடந்தது.

இசைஞானி இளையராஜா தலைமை ஏற்று இசைக் குறுந்தகட்டை வெளியிட, அதை இயக்குநர்கள் மகேந்திரன், பாலு மகேந்திரா பெற்றுக் கொண்டனர்.

பாரதிராஜாவுக்கு இது 50வது படம் என்பதால், அவரை வாழ்த்திப் பேச தமிழ் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் திரண்டிருந்தனர்.

இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்து, பின்னர் பாரதிராஜாவால் நீக்கப்பட்ட பார்த்திபனும் வந்திருந்து வாழ்த்தினார்.

விழாவில் பாரதிராஜா பேசுகையில், "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகருக்கு பல சிறப்புகள் உண்டு. இங்கிருந்து சென்ற இளையராஜா போன்ற பல சினிமா கலைஞர்கள் உலக அளவில் பெருமை பெற்று உள்ளனர்.

எனக்கு இங்குள்ள மக்கள் கலாச்சார பிச்சை அளித்தனர். சினிமா என்னை சென்னைக்கு அழைத்து சென்றது. அந்த சினிமாவை, நான் கிராமத்துக்கு அழைத்து வந்து உள்ளேன். இதுதான் என் சாதனை.

இங்குள்ள கடலை காட்டில், எனக்கு கதை கூறியவர்களைகூட நான் ஆசிரியராக நினைக்கிறேன். கலைப்பயணத்தை தொடங்கிய மதுரையிலேயே, எனது 50-வது படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவது பெருமை அளிக்கிறது," என்றார்.

Comments