விஸ்வரூப பட ரிலீஸ் தேதி நான் தான் அறிவிப்பேன்: கமல்!!!

Thursday,10th of January 2013
சென்னை::என்னோட படத்தின் ரிலீஸ் தேதியை நான்தான் அறிவிப்பேன். மற்றவர்களுக்கு இதில் உரிமை இல்லை என்று நிருபர்களிடம் நேற்று கமல்ஹாசன் கூறினார். அதன் விபரம் வருமாறு:-

கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் படம் விஸ்வரூபம். இந்த படம் டி.டி.எச். தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ளது. 96 கோடி ரூபாய் செலவில் படத்தை மூன்று மொழிகளில் உருவாக்கி இருப்பதாக கமல் கூறி வருகிறார்.

இந்நிலையில் திரைக்கு வருவதற்கு முன்பு சேட்டிலைட்டில், அதாவது இன்று (10.01.2013) விஸ்வரூபம் வெளியிடுவதாகவும், நாளை (11.01.2013) திரையரங்குகளில் வெளியிடுவதாகவும் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார். விளம்பரங்களிலும் வெளியாகியது. இந்த சூழலில் திரையரங்கு உரிமையாளர்கள் படத்துக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி விஸ்வரூபம் படம் இன்று திரைக்கு வரவில்லை. இந்த பிரச்சினை குறித்து கடந்த சில தினங்களாக திரையரங்கு உரிமையாளர்களுக்கும், கமல்ஹாசனுக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மீடியாக்களில் விஸ்வரூபம் படம் இம்மாதம் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று மதியம் அவரது அலுவலகத்தில் கூறியதாவது:-

விஸ்வரூபம் படம் குறித்து சிலர் தவறான செய்திகளை கூறி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இது என்னோட படம். ரிலீஸ் தேதியை நான் தான் அறிவிப்பேன். மற்றவர்களுக்கு இதில் உரிமை இல்லை. முன்பு டி.டி.எச். வந்தது. அப்போது வர்த்தகம் இல்லை. இப்போது முழுமையாக வர்த்தகம் நடக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 10-ம் தேதி (இன்று) படம் திரைக்கு வர வேண்டும். இண்டஸ்ட்ரி நலன் கருதியும், சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் நான் தான் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தேன். மற்றபடி சிலருடைய மிரட்டலுக்கோ, சிலர் எதிர்ப்பதற்காகவோ பயந்து கொண்டு பட ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கவில்லை. மூன்று மொழிகளில் வெளிவருவதால் அந்தந்த மொழிக்காரர்கள் ஒவ்வொரு தேதியை ராசி எண்களாக பார்க்கிறார்கள். இதுதான் இங்கே பிரச்சினை. முன்பு டி.டி.எச். முறையில் 10-ம் தேதி, தியேட்டருக்கு 11-ம் தேதி என்று தனித்தனியே இருந்ததால் பிரச்சினை எழுந்தது. இப்போது இரண்டும் ஒரே நாளில் திரையிடப்படுகிறது. இதுகுறித்து மற்ற பார்ட்னர்களுடன் கலந்து பேசி வருகிறேன். எப்போது படம் திரைக்கு வரும் என்பதை பிறகு அறிவிக்கிறேன்.

இது நேர்மையான தொழில். என்னுடைய வியாபாரத்தை, அஸ்திவாரத்தை அமைத்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு. யாரும் விஸ்வரூபம் படத்தை கேபிள் மூலம் வெளியிடக் கூடாது. அது சட்ட விரோதம். என்னோட அனுமதி இல்லாமல் விற்பவர்களுக்கு சட்டபடி தண்டனை கிடைக்கும். இதற்கு இந்த அரசாங்கம் உதவி செய்யும் என்று நம்புகிறேன். என் படம் நன்றாக வந்திருக்கிறது என்ற அகந்தை இல்லாமல் சொல்கிறேன். பட ரிலீஸ் தேதியை நான் தான் அறிவிப்பேன். அதே நேரத்தில் என்னுடைய ரசிகர்களை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். தேவையில்லாத பிரச்சினைகள் வந்தால் அவர்கள் எனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments