கேரளாவில் 100 தியேட்டரில் விஸ்வரூபம் ரிலீஸ்!!!

Saturday,26th of January 2013
திருவனந்தபுரம்::கேரளாவில் 100 தியேட்டர் களில் விஸ்வரூபம் படம் இன்று ரிலீஸ் ஆனது. கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வருவதாக இருந்தது. இதற்கிடையில் சில முஸ்லிம் அமைப்பினர் படத்தை தடை செய்ய கோரி 2 நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் கொடுத்தனர். பிறகு தமிழக அரசிடம் புகார் தந்தனர். இதையடுத்து படத்தை திரையிட 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கமல் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்து, ‘இந்த வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வரும் 26ம் தேதி (நாளை) படத்தை பார்த்துவிட்டு பிறகு உரிய உத்தரவு 28ம் தேதி பிறப்பிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் படத்தை 2 வார காலத்துக்கு திரையிட புதுச்சேரியில் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் ஜே.அசோக்குமார் நேற்று அறிவித்தார். கேரளாவிலும் விஸ்வரூபம் படம் இன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலையிலேயே தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கேரள அரசின் பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 10 திரையரங்குகள் உள்பட 100 திரையரங்குகளில் படம் இன்று காலை ரிலீசானது. விஸ்வரூபத்துக்காக ஒவ்வொரு தியேட்டரிலும் அதிநவீன சவுண்ட் சிஸ்டம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. படத்தை காண ரசிகர்கள் காலையிலேயே திரையரங்கு முன்பு கூடியிருந்தனர். எர்ணாகுளத்தில் ஸ்ரீதர் தியேட்டர், திருவனந்தபுரத்தில் கைரளி, நியூ தியேட்டர் உள்பட 14 மாவட்டங்களிலும் படம் ரிலீஸ் ஆனது.

Comments