விஸ்வரூபம் இசை வெளியீடும், சர்ச்சையும்!!!

Monday,10th of December 2012
சென்னை::சென்ற மாதம் 7ஆம் தேதி விஸ்வரூபம் ஆடியோவை மூன்று நகரங்களில் வெளியிட திட்டமிட்டு, புயல் காரணமாக ஒரு மாதம் கழித்து அதே 7ஆம் தேதி அதே மூன்று நகரங்களில் வெற்றிகரமாக இசை வெளியீட்டு விழா(க்களை) நடத்தினார் கமல்ஹாசன்.

இவர்கள் சென்ற ஹெலிகாப்ட‌ரில் கமல், ஆண்ட்‌ரியா, பூஜா குமார், சங்கர் எசன் லாய் ஆகியோருடன் வைரமுத்தும் இருந்திருக்க வேண்டும். ஆனால் கவிப்பேரரசு மிஸ்ஸிங். கடைசியில் சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கமலின் மூத்த சகோதரர் அண்ணன் இசைஞானி கமலின் அருகில் அமர்ந்திருந்தார். ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருந்தாலும் ஒரு விழாவில் இரண்டு ஈகோ ஃபேக்ட‌ரிகளுக்கு வாய்ப்பேயில்லை.

முதலில் மதுரை. தேடிப்போய் பார்க்கிற கமல் நம்மையே தேடி வந்தால்... மதுரையின் மொத்த ஜனமும் குவிந்துவிட்டதோ என்று சந்தேகப்படுகிற அளவுக்கு கூட்டம். கமலின் உற்சாகத்தை இது அதிகப்படுத்தியது. சென்னையில் நடந்த விழாவில் மதுரையிலும், கோவையிலும் அடித்து தூள் கிளப்பிவிட்டார்கள் என்று கமலே சிலாகித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மதுரையில் முதல் சிடி-யை தனது மாற்றுத்திறனாளி ரசிகரான பத்‌ரிநாத்துக்கு அளித்து புதுமை செய்தார் கமல். விஐபி-களை அழைத்து சிடி வெளியிடுவதற்குப் பதில் ஒரு சாதாரண ரசிகனுக்கு அந்த கௌரவத்தை தந்து அவனை விஐபி ஆக்குவதற்கு பெ‌ரிய மனம் வேண்டும்.

கோவையில் விஐபி-களாக்கப்பட்டது இரண்டு பேர். இரண்டு ரசிகர்களுக்கு முதல் ஆடியோ சிடியை அளித்தார் கமல். அப்படியே ஹெலிகாப்ட‌ரில் சென்னை. ஆண்ட்‌ரியாவும், பூஜா குமாரும் மேடையேறுவதற்கே இரவு 8.30 ஆனது. அதன் பிறகு கமல். கமலின் அந்தக்காலம் தொட்டு இணைந்துவரும் நண்பர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும் கலந்து கொண்டது விழாவை இன்னும் சிறப்பாக்கியது. நான் விஸ்வரூப கமலுக்கு கோவணம் கட்டிப் பார்த்தவன் என்று பாரதிராஜா பெருமிதப்பட்ட போது கூட்டம் உற்சாகத்தில் கொந்தளித்தது.

ஏ.ஆர்.முருகதாஸ், வஸந்த், கே.எஸ்.ரவிக்குமார், பிரபுசாலமன், பிரபு, கேயார், டி.‌ஜி.தியாகராஜன், ராம்குமார், சந்தானபாரதி, எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கார்த்திக், கருணாஸ், ரமேஷ்கண்ணா... என்று எங்கு பார்த்தாலும் திரையுலகினர்.

கரகோஷத்திற்காகதான் படம் எடுக்கிறேன், நீங்கள் எவ்வளவு கரகோஷம் செய்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்பவன் நான் என்றார் கமல். உங்களின் அளவுகடந்த அன்புதான் எனக்கு அச்சாணி. அந்த கழன்று போகாத அச்சாணி காரணமாகதான் இந்த சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார். டிடிஹெச் பிரச்சனை மனதில் இருந்திருக்கும் போல.

ஏ.ஆர்.முருகதாஸ் சிங்கத்துக்கு சீக்கிரம் சாப்பாடு சமைப்பேன் என்றார். அதாவது கமலுக்கு ஏற்ற கதையை விரைவில் தயார் செய்வாராம். இது பன்ச் டயலாக் இல்லாத போதும் மாய்ந்து போய் கைத்தட்டினார்கள் ரசிகர்கள். ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். கமல் கவனிப்பாராக.

ஒருபுறம் இப்படி கொண்டாட்டமாகப் போய்க் கொண்டிருக்க திரையரங்கு உ‌ரிமையாளர்கள் கொந்தளிப்பாக அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

Comments