இன்று ரஜினி பிறந்த நாள் : 12 கோயில்களில் சிறப்பு பூஜை, யாகம்: அனைவரும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்: ரசிகர்களுக்கு ரஜினி பிறந்தநாள் செய்தி!

Wednesday,12th of December 2012
சென்னை::நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி சென்னையில் 12 கோயில்களில் சிறப்பு பூஜை, கோ தானம், சமபந்தி விருந்து நடக்கிறது.

ரஜினிக்கு இன்று 63வது பிறந்த நாள். இதையொட்டி அவரது பிறந்த நாளை ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடினர். சென்னை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் 12 கோவியில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. சென்னை மாவட்ட நிர்வாகிகள் என்.ராமதாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். காலை 6 மணிக்கு பெசன்ட் நகர் அன்னை வேளங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை.

7 மணிக்கு மயிலை ராகவேந்திரா கோயில் சிறப்பு பூஜை. 8 மணிக்கு அயனாவரம் ஸ்ரீ மகா காளியம்மன் கோயிலில் பூஜை. 8.30 மணிக்கு மயிலை மல்லீஸ்வரர் கோயில் பூஜை, 9 மணிக்கு சைதை இளங்காளி அம்மன் கோயிலில் யாகம், சிறப்பு பூஜை, அபிஷேகம், தி.நகர் வெங்கடாஜலபதி கோயிலில் சிறப்பு பூஜை. பகல் 11 மணிக்கு அண்ணாசாலை தர்காவில் சிறப்பு பிரார்த்தனை, சேப்பாக்கம் சக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்து, மாலை 4 மணிக்கு சிவலிங்கபுரம் பள்ளி மாணவமாணவிகளுக்கு இலவச புத்தகம் சீருடை வழங்குதல் நடக்கிறது.

கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்ததையொட்டி அதற்கு நேர்த்தி கடனாக ரசிகர்கள் காஞ்சிபுரம் அருள்மிகு ஆனந்த வள்ளி அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு கோ தானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து நாளை, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பிறகு ரசிகர்கள் அரசு மருத்துவமனைக்கு ரத்தானம், கண்தானம், உடல் உறுப்பு தானம் வழங்கும் பத்திரத்தில் கையெழுத்திடுவார்கள். விழாவில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதாரவி, பி.வாசு, வாகை சந்திரசேகர், எஸ்.தாணு, கே.ராஜன், ஆர்.வி.உதயகுமார், பாண்டு, பாண்டியராஜன், நமீதா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

அனைவரும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்: ரசிகர்களுக்கு ரஜினி பிறந்தநாள் செய்தி!

ரஜினி பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடினார்கள். அவரை வாழ்த்துவதற்காக ஏராளமானோர் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு திரளாக குவிந்தனர். அவர்களை நேரில் சந்தித்தப்பதற்காக ரஜினிகாந்த் வீட்டிலிருந்து வெளியே வந்தார். உடனே ரசிகர்கள் ‘ரஜினி வாழ்க’, ‘சூப்பர் ஸ்டார் வாழ்க’ என கோஷம் எழுப்பினர். உடனே அவர் ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

அவர்களிடம் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.

பின்னர், ரசிகர்கள் முன்னிலையில் ரஜினி பேசியதாவது:

எனது ரசிகர்கள் அனைத்து விஷயங்களையும் நேர்மையான கண்ணோட்டத்துடனேயே அணுக வேண்டும். ‘கோச்சடையான் படம் நவீன தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படம் சிறப்பான வெற்றி பெற்றால் தமிழில் உள்ள இலக்கியங்கள், இதிகாசங்களை படமாக்கும் முயற்சி வெற்றி பெறும். உங்களால் நான் வாழ்கிறேன். என்னை காண்பதற்காக இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினி தங்களை நேரில் சந்தித்ததால் உற்சாகமடைந்த ரசிகர்களை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ரஜினியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகளை செய்தும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

Comments