நடிப்பதை விட படம் இயக்குவதில் தான் அதிக விருப்பம் - இயக்குநர் சினேகா பிரிட்டோ!!!

Thursday,29th of November 2012
சென்னை::எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 30 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தை தற்போது எஸ்.ஏ.சியின் பேத்தியான சினேகா பிரிட்டோ என்பவர் ரீமேக் செய்கிறார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அக்காள் மகளின் மகளான சினேக பிரிட்டோ, லயோலா கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். தனது தாத்தாவைப் போலவே இயக்குநராகும் ஆசைகொண்ட இவர் தனது தாத்தா இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற சட்டம் ஒரு இருட்டறை படத்தை தற்போது ரீமேக் செய்கிறார். குடும்ப கதையான ஆக்ஷன் படமான இப்படத்தை தற்போது சினேக பிரிட்டோ, காதல் கலந்த ஆக்ஷன் படமாக மாற்றி இயக்கியிருக்கிறார்.

இதில் தமன் ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பிந்து மாதவி, பியா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ரீமா சென் நடிக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தைப் பற்றி எஸ்ஏசி கூறுகையில், "சட்டம் ஒரு இருட்டறை படம் தமிழில் வெற்றி பெற்றபின், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து தயாரானது. கன்னடத்தில், சங்கர் நாக் நடித்தார். மலையாளத்தில், கமல்ஹாசன் நடித்தார். இந்தியில், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் இருவரும் நடித்தார்கள்.

இந்த படத்தின் டைரக்டர் சினேகா பிரிட்டோ, என் அக்காள் மகளின் மகள். அவள் பிறந்து வளர்ந்தது, எங்கள் வீட்டில்தான். குழந்தையாக இருந்தபோது, என் மார்பில்தான் தூங்குவாள். கொஞ்சம் வளர்ந்த பிறகு, ''தாத்தா கதை சொன்னால்தான் தூங்குவேன்'' என்பாள்.

நானும் ஏதாவது கதை சொல்லி தூங்க வைப்பேன். சின்ன வயதில் இருந்தே கதை கேட்ட அனுபவம்தான் அவளை இயக்குநராக்கியிருக்கிறது என்று கருதுகிறேன். பழைய 'சட்டம் ஒரு இருட்டறை' கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம்,'' என்றார்.

சினேகா பிரிட்டோ பேசுகையில், ''படம் இயக்குவது அத்தனை சாதாரண சமாச்சாரமல்ல. இதில் ரீமாசென் சம்பந்தப்பட்ட 'சேசிங்' காட்சியை படமாக்க மிகவும் சிரமப்பட்டேன். எங்க தாத்தா (எஸ்.ஏ.சந்திரசேகரன்) உதவியுடன் படமாக்கி முடித்தேன். படத்தில் தாத்தா, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். நான் நடிப்பேனே என்று சிலர் கேட்கிறார்கள். நடிப்பதை காட்டிலும் படம் இயக்குவதில் தான் எனக்கு அதிக ஆர்வம். ஆகவே தொடர்ந்து தாத்தவைப் போலவே படங்களை இயக்குவேன்." என்றார்.

Comments