அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்!!!

Wednesday,14th of November 2012
சென்னை::அழிந்து வரும் கிராமத்து அடையாளங்கள், உறவுகள், ஆடு, கோழிகள், கூத்துக்கலை என பலவற்றில் தங்கர்பச்சானுக்கு ஆர்வம் இருக்கிறது. அதனை அவர் படத்தில் வைத்திருக்கும் இடங்களும், காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் மறுபடியும் அவரது படத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஊதாரியாக திரியும் அண்ணாமலை மீது அவனது குடும்பம் திருட்டுப்பட்டம் கட்ட அன்பான அம்மாவையும், காதலியையும் விட்டு வெளியூர் செல்கிறான். கல் குவாரியில் வேலைக்கு சேர்ந்து பெரிய ஆளாகிற அதேநேரம் அந்த குவாரியின் சூப்பர்வைசரின் களவாணித்தனத்தை போட்டுக் கொடுத்ததற்காக அவனது கோபத்துக்கும் ஆளாகிறான். ஏழு வருடங்கள் கழித்து நல்ல நிலைமையில் ஊருக்கு கிளம்பும் நேரம் சூப்பர்வைசரும் அவனது கூட்டாளியும் அவனை கொன்றுவிட்டு பணத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள். மனஉளைச்சலுக்கு ஆளாகும் கூட்டாளி அண்ணாமலையின் ஊருக்கு வருகிறான். அங்கு அவனது அம்மா இறந்திருக்கிறாள். இறுதிச் சடங்குக்கு அண்ணாமலை வருவான் என்று ஊரே காத்திருக்கிறது. மனங்கலங்கும் கூட்டாளி; தனக்குத்தானே தண்டனை அளித்துக் கொள்கிறான்.
இந்த நேர்கோட்டு கதையை சஸ்பென்சாக சொல்வதற்கு தங்கர்பச்சான் முயன்றிருக்கிறார். படம் கூட்டாளி பணத்துடன் தனது வீட்டிற்கு வருவதிலிருந்து தொடங்குகிறது. இந்த கேரக்டரில் தங்கர்பச்சானே நடித்திருக்கிறார். பணத்தைப் பார்த்ததும் இன்னும் நீ திருந்தலையா என அவரது மனைவி மீனாள் அவரை திட்டுவதும், தங்கர்பச்சான் பம்முவதும் நாடகம் பார்ப்பது போலவே இருக்கிறது. இடையிடையே அண்ணாமலையின் கதை முன்னறிவிப்பு இன்றி வருகிறது.

அண்ணாமலையாக வருகிற சாந்தனுக்கும் அவரது முறைப்பெண் செல்விக்குமான காதல் காட்சிகளிலும் உயிர்ப்பு இல்லை. இனியா முக்கால்வாசி நேரம் அழுது கொண்டிருக்கிறார். தோல் தொழிற்சாலை முதலாளி காட்டுகிற பரிவு நம்ப முடியாதது. அதேபோல் பெரிய கல்குவாரி வைத்திருப்பவர் முன்பின் தெரியாத சாந்தனுவை தனது வீட்டில் தங்க வைப்பதும் நம்ப முடியாத காட்சிகள்.

ஐயரிடம் பிரசாதம் வாங்கும் போது கொஞ்சம் குனிந்து பிருஷ்டத்தை தள்ளி நிற்பார்களே... அதுதான் தங்கரின் பாடிலாங்வேஜ். மனைவி, முதலாளி, வில்லன் என்று எல்லாரிடமும் இப்படிதான் நிற்கிறார், நடக்கிறார். தூக்கத்தில் திருடுகிற வியாதியாம் இவருக்கு. ஆனால் இவருக்கு தூக்கமே ஒரு வியாதி என்பது பிறகுதான் தெரிகிறது. அரை மயக்கத்தில் இவர் காட்டுகிற பெர்பாமன்ஸ் கடுப்பேற்றுகிறது. பேசாமல் தம்பி ராமையாவையோ, இளவரசையோ நடிக்க வைத்திருக்கலாம். இவர் அப்பாவியா சாதுர்யக்காரரா? படத்திலேயே குழப்பமானது இவரது கேரக்டர். இதில் ஒரு டூயட்வேறு உண்டு.

சாந்தனு உள்பட யாருக்கும் நடிக்க ஸ்கோப் இல்லை. அதாவது செயற்கையான உடல்மொழியில் கேரக்டருக்கு ஒட்டாத வசனங்கள் பேசி நடிக்கச் சொன்னால் அவர்களும் என்னதான் செய்வார்கள். இதில் தேறுவது அம்மாவாக நடித்திருப்பவர். செத்துப் போனதாக நினைத்த மகனின் குரலை ஏழு வருடங்கள் கழித்து கேட்கையில் கதறுகிறாரே... படத்தில் சொல்லத் தகுந்த காட்சிகளில் இதுவும் ஒன்று.

பாடல்களும், பின்னணி இசையும் சுமார். சாதாரணமான காட்சிகள் பின்னணி இசையில்லாமல் படு சாதாரணமாக தெரிகிறது. படத்தின் முக்கியமான பிரச்சனை டைமிங். உணர்ச்சிவசப்படுகிற காட்சிகளில்கூட நடிகர்கள் ஒருகணம் முகபாவம் காட்டவும், வசனம் பேசவும் மறந்து நின்றுவிடுகிறார்கள். வில்லனிடம் தங்கர்பச்சான் பணத்தை திருப்பிக் கொடுக்கும் அந்த ஆரம்பக்காட்சி இதற்கு நல்ல உதாரணம். இந்த டைமிங் மிஸ்ஸிங் வசனம், நடிப்பு, காட்சி என்று எல்லாவற்றையும் நாடகமாக்கிவிடுகிறது. அம்மா வரும் காட்சிகளில் ஒவ்வொரு ஷாட்டிலும் கோழிகளையும், மாட்டையும், நாயையும் காட்டுகிறார். ஒருகட்டத்தில் ஆடியன்ஸே இதென்ன கோழிப் படமா என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

வழக்கம்போல சோகத்தையும், காருண்யத்தையும் கதறக் கதற படத்தில் கொட்டித் தள்ளியிருக்கிறார் தங்கர்பச்சான். படம் முடிந்து ஸ்கிரீன் இருட்டுக்குப் போன பிறகும் தங்கர்பச்சானின் ஒப்பாரி குரல் தொடர்கிறது.

சாகடிக்கப்பட்டது நாம இவர் ஏன் அழுவுறாரு என்று புரொஇயாமலே வெளியேறுகிறார்கள் பார்வையாளர்கள்.

Comments