தேசிய விருதை விட ரசிகர்களின் ரசனையே பெரிது - சீறும் சினேகன்!!!

Thursday,29th of November 2012
சென்னை::மத்தியில் கொடுக்கப்படும் தேசிய விருது சில அரசியல் காரணங்களுக்காக தனக்கு மறுக்கப்படுகிறது என்று கூறிகொண்டிருக்கும் சினேகன், சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்துகொண்டு பேசிய போது தேசிய விருதை விட ஏங்கேயோ ஒரு சிறிய கிராமத்தில் என் பாடலை கேட்டு ரசிக்கும் மக்கள் ரசனையே எனக்கு பெரிது. என்று கூறினார்.

ஆர்.வி.உதயகுமாரிடம் பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய ஜெயக்குமார் என்பவர் இயக்கியிருக்கும் முதல் படம் 'நண்பர்கள் கவனர்த்திற்கு'. இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் பிரம்மா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சந்தானபாரதி, பேரரசு, பன்னீர் செல்வம் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சினேகன், "இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழில் எனக்கு ஒரு பட்டம் கொடுத்திருப்பது எனக்கே தெரியாது. அதை அவர்கள் என் மீது அவர்கள் வைத்துள்ள அன்பில் தான் கொடுத்தார்கள். இளைய கவிபேரரசு என்று பட்டம் போடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நான், அன்று இரவு 12 மணிக்கு அழைப்பிதழை டிசைன் செய்த டிசைனருக்கு போன் பண்ணி, நீங்க என்ன பண்ணுவிங்களோ இதை உடனே எடுத்துவிட வேண்டும் என்று கேட்டேன். நான் வைரமுத்துவிடம் உதவி பாடலாசிரியராக பணியாற்றியதால் இளைய கவிபேரரசு ஆகிவிடமாட்டேன்.

அவருடைய வழி வேறு என்னுடைய வழி வேறு. எனது வாழ்நாளில் பட்டுக்கோட்டையாரைப் போல பெயர் சொல்லும் பத்து பாடல்களை எழுதிவிட்டு போகவேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அந்த பத்து பாட்டுக்கான களம் எனக்கு இதுவரை தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. அதனால் தான் இதுபோன்ற பாடல்களை எழுதிகொண்டிருக்கிறேன்.

இந்த பட்டப் பெயரை நான் சொல்லி அவர்கள் போடவில்லை. என் மீது உள்ள பாசத்தால் எனக்கே தெரியாமல் இப்படி செய்திவிட்டார்கள். 2000ஆம் ஆண்டு முதல் பாடல்கள் எழுதி வரும் நான் எத்தனையோ பட்டங்களை வாங்கியிருக்கிறேன். இதுவரை அதை எங்கும் சொல்லியதில்லை. எத்தனையோ முறை எனக்கு கிடைக்கவேண்டிய தேசிய விருது அரசியல் காரணங்களுக்காக எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. ஆடுகளம் படத்தில் நடனம் அமைத்தவருக்கு, இயக்கியவருக்கு என அனைவருக்கும் தேசிய விருது கிடைத்தபோது பாடல்கள் எழுதிய எனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை. "அவர் அவர் வாழ்க்கையில்..." பாடலுக்காக எனக்கு தேசிய விருது அறிவிக்கபட இருந்த நேரத்தில், யாருடைய தலையீட்டினாலே அந்த விருது எனக்கு கிடைக்காமல் போனது. அப்போதே நான் முடிவு செய்தேன் இனி என் பாடல்களை தேசிய விருதுக்கு பரிந்துரை செய்வதில்லை என்று. எங்கேயோ ஏசி அறையில் கோட் சூட் போட்டுக்கொண்டு அமர்ந்து என் பாடல்களுக்கு கொடுக்கப்படும் தேசிய விருதை விட, ஏதே ஒரு கிராமத்து மூளையில் ஆடு மாடு மேய்த்துகொண்டு என் பாடலை ரசிக்கும் ரசிகரின் ரசனையே எனக்கு போதும்." என்று ஆவேசமாக பேசினார்

Comments