மாற்றான் ö விமர்சனம் »!!!

Saturday,13th of October 2012
சென்னை::அயன், கோ, பிளாக் பஸ்டர்களை தந்த கே.வி.ஆனந்தின் படம். இரண்டு சூர்யாக்கள் வேறு. லா‌ஜிக்கெல்லாம் மூட்டை கட்டி வைத்தாலும் ஏதாவது மே‌ஜிக் வச்சிருப்பார் என்று நம்பிதான் உள்ளே போனது. அப்புறம் என்னாச்சி என்பதற்கு முன் படத்தின் கதை.

அதாவது நோ ஃபீல்டை பெர்ட்டிலைசர்னு சொல்லி உக்வேனியா மாஃபியா ஸ்டீராயிடாக்கி லோகாஸ் எனர்ஜைஸ் கண்டு பிடிக்க முடியாமல் ஜெனிடிக் சயின்டிஸ்டோட சைல்டு டிஸைனிங்... ஏதாவது பு‌ரியுதா? கே.வி.ஆனந்தும், அவரோட கதை இலாகா சுபாவும் அகராதி புடுச்சோ இல்லை படிச்சோ சேர்த்துகிட்ட மேற்படி சமாச்சாரங்களை அவரவர் டியூஷன் வைத்து தெ‌ரிஞ்சுக்குமாறு கேட்டுக் கொண்டு ராவான கதைக்கு வந்தால்...

முகிலன், அகிலன் ரெட்டைப்புள்ளைங்க. இதில் ஒருத்தருக்குதான் இதயம். இதயம் இருக்கிறவர்னா அவரு கம்யூனிஸ்டாதான் இருக்கணும். முகிலன் செல்ஃபோன்ல சேகுவேரா படம் வச்சிருக்கார், சுத்தியல் அ‌ரிவாள் போஸ்டருக்கு முன்னால வடை தின்னுறார். கன்ஃபார்ம் கம்யூனிஸ்ட்தான்.

இவங்களோட அப்பா - சச்சின் கடேஹர் - ஜெனிடிக் விஞ்ஞானி. இதெல்லாம் யாருக்கு வேணும்யான்னு நம்ம பொலிடிகல் பீப்பிள் அவரை துரத்த தனியா தொடங்குறாரு ஒரு குழந்தைங்க ஊட்டச்சத்து ஃபேக்ட‌ரி. விக்ரமன் படம் மாதி‌ரி ஒரே பாட்டில் பெ‌ரிய அப்பாடக்கராயிடறார். அவரோட ஊட்டச்சத்து ஃபார்முலாவை திருட வால்கானு அப்செலியூட் வோட்கா மாதி‌ரியே இருக்கிற ஒரு உக்வேனியா நாட்டுக்கா‌ரி சில கசமுசா வேலை பண்றா. அவதான் ஸ்பை-ன்னு பார்த்தா நோ நோ அந்த பேட் கை உங்க டாடிதான்னு செத்துப் போயிடறா. அந்த ரகசியம் அடங்கிய அவளின் பென் ட்ரைவ் நம்ம கம்யூனிஸ்ட் கையில கிடைக்குது. டாடியோட ஆளுங்களே பிள்ளைங்களை அடிச்சு துவைச்சு பென் ட்ரைவை பிடுங்கிக்கிறாங்க. பிரைன் டெட்டான (கடவுளே... எப்படி பார்த்தாலும் இந்த விஞ்ஞான வார்த்தை விடாது போலிருக்கே) முகிலனின் இதயத்தை எடுத்து அகிலனுக்கு பொருத்தி.... ப்ளீஸ் ஒரு சின்ன பிரேக்.

அகிலனுக்கு அப்பாதான் வில்லன்ங்கிறது தெ‌ரிஞ்சு போச்சு. குழந்தைகளுக்கு கொடுக்கிற தனது கம்பெனி பால் பவுட‌ரில் அப்பா ஏதோ அடாத பொருளை விடாது கலக்குறார்ங்கிறதும் தெ‌ரியுது. அந்த வஸ்து உக்வேனியாவிலிருந்து வருது. உக்வேனியா ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிற ஊர்னு பில்டப் தருவதை வைத்து சூர்யா சூசகமாக போய் கிளைமா‌க்ஸை முடிப்பார் என்று பார்த்தால் அந்த ராணுவத்தோட தளபதி தலையிலேயே பிஸ்டலை வைத்து ஸ்ஸ்ஸ்ஸ்..... டமார் ஸ்ஸ்ஸ்....டமார்... நான்கைந்து ராக்கெட் லாஞ்ச‌ரிலிருந்து தப்பித்து, இதுக்கெல்லாம் நடுவில் அமெ‌ரிக்காகாரனே பிச்சை வாங்குற மாதி‌ரி ஒரு கதை.

உக்வேனியா சோவியத் யூனியனோடு இணைஞ்சி இருந்த நேரம் 1992ல் நடந்த உலக விளையாட்டில் பதக்கம் பறிக்கிறதுக்காக வீரர்களுக்கு கண்டே பிடிக்க முடியாத ஊக்க மருந்தை தர்றாங்க. இந்த கண்டே பிடிக்க முடியாததை கண்டு பிடிக்கிறது நம்ம ஜெனிடிக் விஞ்ஞானி. அந்த ஊக்க மருந்து சாப்பிட்டா கொஞ்சம் கொஞ்சமா மரணம் நிச்சயம். இதை மறைக்க மருந்து சாப்பிட்ட எல்லா வீரர்களையும் கொன்னுடறாங்க. அப்படி சொல்லிட்டு இல்லையில்ல கொல்லாம அவங்களை வச்சு ப‌ரிசோதனை பண்றதா சோம்பிஸ் படத்துல வர்ற மாதி‌ரி கொஞ்ச பேரை காட்றாங்க. அந்த ஊக்க மருந்தை மாடுகளுக்கு கொடுத்து அது கறக்கிற பாலை வச்சு பவுடர் தயா‌ரிச்சு... நம்ம வில்லன் ஜெனிடிக் விஞ்ஞானி பண்ணுற கோல்மாலை கண்டு பிடிச்சாச்சு. ஆகா, சுபம்னு எந்திருக்க விடாமல் டர்ர்ர்ர்னு மேலும் இழுத்து....

சூர்யாவுக்கு சாஃப்டா க‌ஜினி மாதி‌ரியும், கலகலன்னு அயன் மாதி‌ரியும் இரண்டு வேஷம். ஜெனிடிக், மரபணு என்று கே.வி.ஆனந்த் கதை சொல்லும் போதே 7ஆம் அறிவு அலார்ட் ஆகியிருக்க வேண்டாம்? ச‌ரி நேரம். ரொம்ப நல்லாவே பண்றார். அப்பாதான் வில்லன்னு தெ‌ரிந்து அவ‌ரிடம் பொங்குகிற இடத்தில் க்ளாஸ். இடைவேளைக்கு முன் வரும் உருப்படியான ஒரே காட்சி இதுதான். சூர்யாவுக்கு காஃபி தர்றது, கிளாமரா காஸ்ட்யூம் போட்டுக்கிறது, சண்டைக்கு நடுவில் ஹீரோ பின்னால ஒளிஞ்சுக்கிறதுன்னு காஜல் அகர்வால் ஹீரோயின் டூட்டியை பிரமாதமா பண்றார். காட்டுக்குள் நடக்கிற சண்டையில் துப்பாக்கி குண்டு படுமோங்கிற பயத்தைவிட மேக்கப் கலைஞ்சிடுமோங்கிற பயம் அப்பட்டமா தெ‌ரியுது. கீப் இட் அப்.

முன்பாதி முழுக்க எதிர்பார்ப்பு தி‌ரியா ஆனந்த் கொளுத்துறார். இரட்டை பிள்ளைகள் பிறந்ததும், மரபணுவுல பல வேலைகள் செஞ்சி பிறந்த சூப்பர் ஹியூமன்னு ஒரு த்‌ரி. (கிளைமாக்ஸில் இதற்கு பத்து அவதார விளக்கம் ஒன்று சொல்வார் பாருங்கள். சூர்யாவோடு நமக்கும் கண்கலங்கிவிடும்) 45 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்னு இன்னொரு த்‌ரி. இடைவேளைக்குப் பிறகு ஒரே சரவெடியா இருக்கப் போவுது என்று பார்த்தால் எல்லாமே புஸ்.... உக்வேனியா வீரர்களை கேவலப்படுத்தியது இல்லாமல் பீகா‌ரிகளையும் கொள்ளைக்காரர்களாக ஒரு இடைச்செருகல். கரண்ட் மேட்டராமாம். சென்சிடிவ் பிரச்சனைகளையெல்லாம் இப்படி தொட்டு நாக்கில் தடவிக் கொண்டிருந்தால் ஆனந்த் சார்... நிஜமாகவே ஏதாவது நக்சல்கள் கிட்நாப் பண்ணிவிடப் போகிறார்கள்.

எல்லாமே சுமாராக இருப்பதாலா தெ‌ரியவில்லை சந்தடியில்லாமல் ஸ்கோர் செய்துவிடுகிறார் ஹா‌ரிஸ். மிலிட்ட‌ரியும் மாஃபியா கும்பலும் செத்து செத்து விளையாடிக் கொண்டிருக்கையில் ஏம்பா ஏதாவது பாட்டைப் போடு என்று தியேட்ட‌ரில் ஒரு அபலக்குரல். ஹா‌ரிஸுக்கு கிடைத்த வெற்றிதானே. உக்வேனியா, ராணுவம் என்று கம்பீரமாக போய்க் கொண்டிருக்கையில் ஹீரோவும், ஹீரோயினும் பால் வண்டியில் ஏறி எண்பதுகளின் தமிழ் சினிமா மாதி‌ரி தப்பித்தால் அவரும் என்ன செய்வார்? போடு லோக்கல் மேளத்தை. ஒன்றிரண்டு விசிலாவது கிடைக்கிறது.

ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை, அபாரம் என்றெல்லாம் சொன்னால் கேட்ராக்‌ட் வந்துவிடும். இப்போதுள்ள நவீன கேமராவில் யார் சுட்டாலும் குளுமைதான். அதைத்தாண்டி என்ன என்று பார்த்தால் பூ‌ஜ்யம். எஸ்கலேட்டர் சண்டைக்காட்சியில் கிராஃபிக்ஸும், கேமராவும், எடிட்டிங்கும் ஒன்றாக நம்மை கைமா செய்கிறது. ஆக்சன் கோ‌ரியோகிராஃபில் ஆக்சன் இருக்கு, கோ‌ரியோகிராஃப் மிஸ்ஸிங். தலைக்கறி சாப்பிடுறதைப் பாரு, ஏதோ பஜனை சத்தம் கேட்கிற மாதி‌ரி இருக்கு போன்ற அகிலனின் ஒன் லைன் காமெடிக்கு கொஞ்சமாக புன்னகைக்கலாம்.

மாற்றான் - தங்க‌ரின் வார்த்தையில் சொன்னால்.... என்னங்க நடக்குது இங்க?

Comments