கலைஞர்களின் திறமையை வளர்க்க சினிமா பயிற்சி பள்ளி தொடங்குகிறார் கமல்:ஃபிக்கியின் (FICCI) மூன்றாவது மாநாடு சென்னையில் நடக்கிறது!

Thursday,4th of October 2012
சென்னை::சகலகலாவல்லவர் என்று போற்றப்படும் கமலஹாசன், சினிமா துறைக்கு தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர். தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தீராத தாகம் கொண்டவர்களில் கமலஹாசன் முக்கியமானவர்.

சிறுவயது முதலே சினிமா துறையில் இருந்து வருவதாலும், டைரக்டர், வசனகர்த்தா, பாடகர், நடன இயக்குநர் என்ற பல்வேறு பரிமாணங்களை கொண்டவர் என்பதாலும், சினிமா கலைஞர்களின் கஷ்ட, நஷ்டங்களை நன்கு அறிந்தவர். எனவே அவர்களுக்கு தன்னால் இயன்ற அளவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்.

அந்த எண்ணத்தில் உதித்ததுதான் சினிமா கலைஞர்களுக்கு பயிற்சி பள்ளி தொடங்கும் திட்டம். குறிப்பாக சினிமா துறையில் உள்ள இளம் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக சென்னையில் பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்க கமலஹாசன் முயற்சி எடுத்து வருகிறார். இதுபற்றிய விவரங்களை கமலஹாசன் தரப்பினர் சேகரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சமீபத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கமலஹாசன் கூறியதாவது:-

நான் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிகராக வேண்டும் என்று விரும்பினேன். அப்போது நடிப்பு பயிற்சி எடுத்துக்கொள்ள இடங்களோ, வசதிகளோ கிடையாது. ஆனால் இப்போது அதற்கான வசதிகள் பிரமிக்கத்தக்க வகையில் பெருகி விட்டன. நடிப்பு பயிற்சிக்காக ஏராளமான பள்ளிகள் உள்ளன. அதே சமயத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் மற்றும் திரைக்கு பின்னால் கடினமான பணிகளை செய்பவர்கள், இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க பள்ளிகள் கிடையாது.

எனவே அப்படிப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு பள்ளியை தொடங்க முயற்சி எடுத்து வருகிறோம். இதுகுறிப்பாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

இவ்வாறு கமலஹாசன் கூறினார். ........
இந்திய தொழில் வர்த்தக சம்மேளங்களின் கூட்டமைப்பு (FICCI) சார்பாக சென்னையில் அதன் மூன்றாவது மாநாடு மற்றும் கருத்தரங்கம் வரும் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கின் முறையான அறிவிப்பை ஃபிக்கி அமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக சம்மேளனத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சென்னையில் சமீபத்தில் அறிவித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், "தென்னிந்தியத் திரைப்படத் துறையினர் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் பயன்பாடு, திரைப்படத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தற்போதைய உத்திகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஃபிக்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி, அனிமேஷன், கிராஃபிக்ஸ், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டப்பிங், இசை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நவீன தொழில் புரட்சி குறித்து பல அரிய தகவல்களை இந்த மாநாட்டில் அறிந்துகொள்ளலாம்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பயிலரங்குகள், சிறப்பு வகுப்புகள், திரைக்கதையாக்க வகுப்புகள், டிஜிட்டல் திரைப்பட உருவாக்கம், டிஜிட்டல் ஒலி நுட்பம் உள்ளிட்ட திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்த கருத்துப் பதிவுகள் இடம்பெறுகின்றன.

இதில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் சினிமா கலைஞர்கள் உள்பட ஹாலிவுட் கலைஞர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். நான் இயக்கி நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தைத் தயாரிக்கும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னும் கலந்துகொள்கிறார். சினிமா கலைஞர்கள் கூடுகிறார்கள் என்றவுடன் இதை ஏதோ ஒரு ஸ்டார் நைட் நிகழ்ச்சி என கருதிவிட வேண்டாம். நூறு ஆண்டுகளாக இந்திய சினிமாவை வளர்த்த முன்னோடிகளுக்கும், மூத்தோர்களுக்கும் சிறப்பு செய்யும் ஒரு கெளரவமான நிகழ்வு இது. இத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி இந்திய சினிமாவை உலக சினிமாவை நோக்கி பயணிக்கச் செய்யவோம்." என்றார்.

இந்த பயிலரங்க கூட்டத்தில் திரையுலகில் இருப்பவர்கள் மட்டும் இன்றி, திரையுலகில் கால்பதிக்க நினைப்பவர்களும், திரைத்துறையின் மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்துகொள்ளலாம். இதில் கலந்துகொள்வதற்கான பதிவுத் தொகையாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

மேலும் இதன் விபரங்களை அறிந்துகொள்ள samir.kumar@ficci.com, frames.registration@ficci.com ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும், 011-23766929 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

Comments