தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூடியது!!!

Sunday,28th of October 2012
சென்னை::தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது. இரு அணியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்ததால் பதற்றம் உருவானது. அங்கு 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் இருக்கிறார். அவரது தலைமையிலான அணியினர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கேயார் தலைமையிலான எதிர் அணியினர் முடிவு செய்தனர். சங்க பொதுக்குழு கூட்டுவதற்கு தடை கேட்டு சந்திரசேகர் அணியினர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றனர். தடையை விலக்க கேட்டு கேயார் அணியினர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தடை விலக்கப்பட்டதுடன் ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் பொதுக்குழு கூட்டலாம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை 100 அடி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தயாரிப்பாளர்கள் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் இன்று காலை தொடங்கியது.

இக்கூட்டத்தில் சங்க செயலாளர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு, பட அதிபர்கள் கேயார், கே.ராஜன், சுவாமிநாதன், ஆனந்தா எல்.சுரேஷ், சோழா பொன்னுரங்கம், சுரேஷ் பாலாஜி உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தியும், எதிர்த்தும் இருதரப்பினரும் வாக்குவாதம் செய்தனர். கூட்டம் நடக்கும் அறையில் பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புக்காக கூட்டம் நடக்கும் ஓட்டலை சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். உறுப்பினர் அல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டதாக கூறி, கூட்டம் நடக்கும் அறைக்கு முன்பு சந்திரசேகர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு அணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். முன்னதாக நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கேயார் அணியினர் சென்றனர். அப்போது சங்கத்துக்கு பூட்டு போடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பூட்டை திறக்கும்படி சங்கத்தின் முன் கூடிய தயாரிப்பாளர்கள் வற்புறுத்தினார்கள். மாலையில் சங்க அலுவலகத்துக்கு வந்த நீதிபதி பத்மநாபன், பூட்டப்பட்ட அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த தயாரிப்பாளர்களுடன் பொதுக்குழு கூட்டம் அமைதியாக நடத்த வேண்டியது குறித்து ஆலோசனை வழங்கினார். தயாரிப்பாளர் சங்கத்தினரிடையே நடந்த மோதலால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments