மாற்றான் திரை விமர்சனம்!!!

Wednesday,17th of October 2012
சென்னை::ஒட்டி பிறந்த இரட்டையர் என்ற விஷயத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப் பட்டிருந்தாலும், அதைக் காட்டிலும் ஒரு முக்கியமான சமுதாய பிரச்சனையை இயக்குநர் கே.வி.ஆனந்தும், எழுத்தாளர்கள் சுபாவும் கமர்ஷியலாக இப்படத்தில் கையாண்டு இருக்கிறார்கள்.

சூர்யாவின் அப்பா
ஒரு மரபணு ஆராய்ச்சியாளர். தனக்கு பிறக்கப் போகும் குழந்தை பல சக்திகள் கொண்டதாக பிறக்க வேண்டும் என்று நினைத்து, தனது மனைவிக்கு டெஸ்ட் டியூப் குழந்தை பிறக்கச் செய்கிறார். அந்த ஆராய்ச்சியின் தோல்வியால் ஒரு இதயம், இரு உடல் என்று இரட்டை குழந்தை ஒட்டி பிறக்கிறது. மருத்துவர்கள் ஒரு குழந்தைக்கு ஆபத்து என்ற போதிலும் அந்த குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஏழ்மையான நிலையில் இருக்கும் சூர்யாவின் அப்பா, குழந்தைகளுக்கான பால் பவுடர் ஒன்றை தயாரித்து அதன் மூலம் பெரிய கோடீஸ்வரனாகிறார். குறுகிய காலத்தில் அந்த நிறுவனம் அடையும் வளர்ச்சியை கண்டு, போட்டி நிறுவனங்கள் அந்த பால் பவுடர் தயாரிக்கும் முறையை அறிய முயற்சிக்கிறார்கள். அந்த சமயத்தில் ரஷ்யாவில் இருந்து வரும் ஒரு பெண், சூர்யாவின் அப்பாவுடைய பால் பவுடர் நிறுவனத்தை உளவு பார்க்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதை புகைப்படம் எடுக்கிறார். அவளும் அந்த பால் பவுடர் தயாரிக்கும் முறையை கண்டுபிடிக்க முயல்கிறாள்.

இதற்கிடையில் அந்த நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரியும் காஜல் அகர்வாலுக்கும், சூர்யாவுக்கும் காதல் ஏற்படுகிறது. இரட்டை சூர்யாவில் அமைதியானவரை காதலிக்கும் காஜல் அகர்வால், அந்த ரஷ்ய பெண்ணை சூர்யாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இதற்கிடையில் சூர்யாவின் அப்பாவுடைய பால் பவுடர் நிறுவனத்தைப் பற்றி தகவலை சேகரிக்கும் அந்த ரஷ்ய பெண்ணை சூர்யாவின் அப்பா கொலை செய்து விடுகிறார். கொலை செய்யப்பட்ட அந்த பெண், இறப்பதற்கு முன்பு தான் சேகரித்த தகவல்களை ஒரு பென்டிரைவரில் காப்பி செய்து அதை விழுங்கி விடுகிறார்.

அந்த பென்டிரைவரை கைபற்ற சூர்யாவின் அப்பா முயற்சி செய்ய அது சூர்யாவிடம் கிடைக்கிறது. பிறகு அந்த பென்டிரைவரை கைபற்ற நினைக்கும் ஒரு கும்பல் சூர்யாவை தாக்குகிறது. இந்த தாக்குதலில் ஒரு சூர்யா இறந்துப் போகிறார். இதற்கிடையில் உயிரோடு இருக்கும் சூர்யாவிடம் அந்த பென்டிரைவர் கிடைக்கிறது. அதை வைத்து சூர்யா என்ன செய்தார்? சூர்யாவின் அப்பாவுக்கும் அந்த பென்டிரைவருக்கும் என்ன சம்மந்தம், அவர் தயாரிக்கும் பால் பவுடரில் அப்படி என்ன இருக்கிறது? என்பதுதான் மீது கதை.

ஒட்டி பிறந்த இரட்டையர் கதாபாத்திரத்தை பின்புலமாக வைத்துகொண்டு இயக்குநர் கே.வி.ஆனந்த் ஒரு விறுவிறுப்பான படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை, சுவாரஸ்யமான காட்சிகள் என்று ஒவ்வொரு படத்திலும் வெற்றி கனியை பறித்துகொண்டிருந்த கே.வி.ஆனந்த்-சுபா கூட்டணி இந்த படத்தில் சற்று சறுக்கியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சூர்யா எப்போதும் போல தனது கதாபாத்திரத்தை கனம் படுத்தியிருக்கிறார். அகிலன், விமலன் என்று ஒட்டி பிறந்த இரட்டையர் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் சண்டைக்காட்சிகளில் அவருடைய உழைப்பு நம்மை மிரளவைக்கிறது.

காஜல் அகர்வல், பெயருக்கு ஏற்றவாறே பாலில் செய்த மார்வாடி ஸ்வீட் போல இருக்கிறார். பெரிதாக நடிப்பை வெளிப்பத்த வாய்ப்பு இல்லை என்றாலும் அவருடைய அழகை பலமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கும் சச்சின் கடேகர், பணக்கார வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகர். முகபாவனையிலேயே பல காட்சிகளில் தனது நடிப்பு திறமையை காண்பித்திருக்கிறார்.

செளந்தர்யன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டம். படத்திற்கு எத்தனை கோடிகள் செலவு செய்தார்களோ, அத்தனை கோடிகளையும் திரையில் காட்டியிருக்கிறது அவருடைய ஒளிப்பதிவு.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பின்னணி இசை நகைச்சுவையாகவும், பாடல்கள் சுமாராகவும் இருக்கிறது. (ஒரு வேளை தனுஷைப் போல கேற்க கேற்க தான் பாடல்கள் பிடிக்குமோ என்னவோ!)

ஒளிப்பதிவாளராக தன்னை தமிழ் சினிமாவில் நிரூபித்த கே.வி.ஆனந்த், தான் இயக்கிய படங்களின் மூலம் இயக்குநராகவும் நிரூபித்து வந்தார். அவருக்கு என்று இருக்கும் ஒரு பாணியை இப்படத்திலும் பார்க்க முடிகிறது. புதுபுது லொக்கேஷன்களை தேடி பிடிப்பதில் ரொம்பவே மெனக்கெடும் கே.வி.ஆனந்த், இந்த படத்திலும் அதுபோன்ற சில லொகேஷன்களின் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை கருவாக எடுத்துகொண்டு அதை கமர்ஷியலாக சொல்லி வெற்றி பெறும் கே.வி.ஆனந்தின் ஃபார்மூலாவுக்கு ஒரு பெரிய பாராட்டு.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சுவாரஸ்யத்தோடு, எதிர்பாராத காட்சிகளின் மூலம் படத்தின் முதல் பாதியை அசத்தலாக கொண்டு சென்ற கே.வி.ஆனந்த், இரண்டாம் பாதியில் என்ன நடக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் யூகிக்ககூடிய அளவில் திரைக்கதை அமைத்திருப்பது படத்திற்கு சற்று தோய்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும் உக்ரைனுக்கு செல்லும் சூர்யா, அங்கு ஈடுபடும் விசாரணையில், என்ன நடந்திருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மீண்டும் படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு சென்றாலும், இறுதியில் படத்தை எப்படி முடிக்க வேண்டும் என்று தடுமாறி, தமிழ் சினிமாவில் காலகாலமாக கையாளப்பட்ட க்ளைமாக்ஸ் யுக்தியை பயன்படுத்தி படத்தை முடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

Comments