விலாசமின்றி இருந்தேன்... ஆனா இப்போது....! மனம் திறக்கிறார் கங்கை அமரன்!!!

Wednesday,10th of October 2012
சென்னை::கிராமத்து மணம் கமழும் திரைப்படங்களை வழங்குவதில், பெயர் பெற்றவர் இயக்குனர் கங்கைஅமரன். தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த சகோதரர்கள், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் கங்கை அமரன். கங்கை அமரன் எவ்வளவோ திரைப்படங்களை எடுத்திருந்தாலும், இவரது "மாங்குயிலே... பூங்குயிலே... சேதி ஒண்ணு கேளு... கரகாட்டக்காரன் படப்பாடல்கள், பட்டிதொட்டி எல்லாம் பிரபலம். கிராமத்து வீதிகளில் வலம் வந்த மனது, சென்னைக்கு சென்றாலும், கிராமியமாய் மணக்கிறது. மண் மணம் வீசும் அவரது பேட்டி இதோ...

கங்கை அமரனிடம் பிரிக்க முடியாதது?

நாங்கள் வளர்ந்த கிராமத்தை, எங்கள் நினைவிலிருந்து பிரிக்க முடியாது. தென் மாவட்டங்களுக்கு வரும் போதெல்லாம், பண்ணைப்புரம் சென்று, மலரும் நினைவுகளை "அசைபோட்டு செல்வோம்.

இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் கங்கை அமரன் ஓர் ஒப்பீடு?

அவர் அண்ணன், நான் தம்பி. அவர் அறிவாளி, அதிகம் பேசமாட்டார். அவருக்கு நேர்மாறாக நான், அதிகம் பேசுவேன்.

திரைப்படத்துறையை தேர்வு செய்தது ஏன்?

இசை, கதை மற்றும் பாடல் எழுதுவது எங்கள் குலத்தொழில். அதிகளவில் திரைக்கதை எழுதினேன். அதை படமாக்கும் எண்ணம் வந்ததால், இத்துறையை தேர்வு செய்தேன்.

இசைஞானி ஆகும் ஆசை உங்களுக்கு வந்ததுண்டா? இல்லை உங்களுக்குள் இசை... இயக்கம் என, தனியாக பிரித்துக்கொண்டீர்களா?

அண்ணனுக்கு இசையின் மீது ஆர்வம் அதிகம். அவர் இசைஞானியானார். எனக்கு, கிராமத்து கதைகள் மீது ஆர்வம் வந்ததால், திரைப்பட இயக்குனர் ஆனேன். அவ்வளவு தான்.

40 ஆண்டுகளுக்கு முன் கங்கை அமரன் எப்படி இருந்தார். தற்போது எப்படி உள்ளார்?

40 ஆண்டுகளுக்கு முன் விலாசமின்றி இருந்தேன். திரைப்படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு, இயக்குனர்களை சந்தித்தபோது, இயக்குனர்கள் "பிஸியாக இருப்பதை பார்த்துள்ளேன். சொந்த முயற்சியால், பெரிய அளவில் படங்கள் எடுத்து முன்னேறினேன். இன்றைக்கு, நம்மிடம் வாய்ப்புக்கேட்டு வருவோரைப்பார்த்து, எனது முந்தைய வாழ்க்கையை அசைபோட்டு பார்ப்பேன். "எதைத் தேடுகிறோமோ, அது கிடைத்தே தீரும்,.

உங்கள் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என் வாரிசுகள், என் பெயரை மட்டுமே உபயோகிக்க முடியும். அவர்களுக்கென்று திறமை இருந்தால் மட்டுமே, வளர முடியும். அதை அவர்கள் நன்கு உணர்ந்து செயல்படுகின்றனர்.

எதிர்கால திட்டம்?

எங்கள் தொழிலை பொருத்த மட்டில், "வெயில் அடித்தால் காய வேண்டும், "மழை பெய்தால் நனைய வேண்டும்,. பாடகர் ஜேசுதாசுடன் இணைந்து, பல ஆல்பங்களை தயாரித்துள்ளேன். இன்னும், ஆல்பங்கள் தயாரிக்கப்படும்.

அரசியலில் குதிக்கும் எண்ணம் உண்டா?

திரைப்படத்துறை தான் என் மூச்சு. அதை விடுத்து எம்.பி., எம்.எல்.ஏ., ஆக வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை, "எள்ளளவும் இல்லை. நமக்கு தெரிந்த வேலையை செய்தால் போதும். நிறைய "ஆல்பம் வந்து கொண்டிருக்கிறது. அதை முழு ஈடுபாட்டுடன் செய்கிறேன்.

சினிமாத் துறையின் இன்றைய நிலை என்ன?

சினிமாவில், "டெக்னிக்கல் தான் வளர்ந்துள்ளது. கதைகள் "உணர்வுப்பூர்வமாக இல்லை.

Comments