நவீன தொழில்நுட்பத்தில் திரையுலகம்: தமிழில் தயாராகும் '3 டி' படங்கள்!!!

Tuesday, 9th of October 2012
சென்னை::தமிழ் திரையுலகம் ஹாலிவுட்டுக்கு இணையாக நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுகிறது. ஆங்கில படங்களை போல் தமிழ் படங்களையும் 3டியில் எடுக்க துவங்கியுள்ளனர்.

இதற்கேற்ப தியேட்டர்களும் 3டி படங்கள் திரையிடும் வகையில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ரிலீசான ரஜினியின் ‘சிவாஜி’ படம் 3டிக்கு மாற்றப்படுகிறது. சமீபத்தில் இதன் 3டி டிரெய்லரை வெளியிட்டனர். பாடல் காட்சிகளும் 3டியில் வெளியானது.

இதனை பார்த்து ரஜினி வியப்பானார். ஜப்பானிலும் இதன் டிரெய்லர் வெளியிடப்பட்டது. படத்தின் கதாநாயகி ஸ்ரேயா இதில் கலந்து கொண்டார். ரஜினியின் முதல் 3டி படம் இதுவாகும். தமிழகம் முழுவதும் ‘சிவாஜி 3டி’ படம் விரைவில் வெளியாக உள்ளது. பார்த்திபன் நடித்த ‘அம்புலி’ படமும் 3டியில் வந்துள்ளது.

லாரன்ஸ், லட்சுமிராய் நடித்து ரிலீசான ‘காஞ்சனா’ பேய் படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. இப்படத்தை 3டியில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதில் புதிய பாடல் காட்சியொன்றையும் 3டியில் படமாக்கி கூடுதலாக சேர்க்கின்றனர்.

ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள ‘கோச்சடையான்’ படமும் 3டி யில் தயாராகியுள்ளது. ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

‘அதிசய உலகம்‘, ‘நான்காம் பிறை’ படங்களும் 3டியில் தயாராகின்றன. தியேட்டர்களில் ரசிகர்களுக்கு இப்படங்கள் புதிய அனுபவங்களை கொடுக்கும் என்று திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர். இதர முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களை 3டியில் உருவாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
 27-7-12_findyour_INNER_468x60.gif

Comments