Monday,17th of September 2012சென்னை::ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வு செய்யும் பட்டியலில் ஸ்ருதிஹாசன் அறிமுக படம் இடம்பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கான பிரிவில் சிறந்த வெளிநாட்டு படம் என ஒரு படத்தை தேர்வு செய்வார்கள். இதற்காக இந்தியாவிலிருந்து பல மொழி படங்களை பார்த்து, அதிலிருந்து குறிப்பிட்ட படத்தை அனுப்பிவைப்பார்கள். அந்த வரிசையில் தமிழ் படங்களும் பங்கேற்கின்றன. ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைக்கும் படங்களை இந்திய திரைப்பட சம்மேளனம் தேர்வு செய்கிறது.
இம்முறை ஆஸ்கர் போட்டியில் பங்கேற்பதற்கான பட தேர்வு 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஐதராபாத்தில் உள்ள பிலிம்சேம்பர் கட்டிடத்தில் நடக்கிறது. 16 உறுப்பினர்கள் அடங்கிய குழு படங்களை பார்வையிட்டு ஆஸ்கரில் பங்கேற்பதற்கான படங்களை தேர்வு செய்கிறது. சூர்யா நடிக்க ஸ்ருதி ஹாசன் அறிமுக படமான ‘7ஆம் அறிவு', பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்த ‘வழக்கு எண் 18/9' ஆகிய 2 தமிழ் படங்கள் இந்த தேர்வுக்காக போட்டியிடுகின்றன. ‘ஹீரோயின்', ‘பர்பி', ‘கஹானி', ‘கேங்ஸ் ஆப் வசேப்புர்', ‘பான்சிங் தோமர்', ‘பெராரி கி சவாரி' மற்றும் ‘தி டர்ட்டி பிக்சர்' ஆகிய பாலிவுட் படங்கள், தெலுங்கிலிருந்து ‘ஈகா', மலையாளத்திலிருந்து ‘அக்ஷநிந்தி நிறம்' மற்றும் மராட்டி, குஜராத், பஞ்சாபி ஆகிய மொழிகளிலிருந்து தலா ஒரு படமும் இதில் பங்கேற்கின்றன.
இதுபற்றி பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண் கூறும்போது, ‘சென்னையில்தான் இப்படங்களின் தேர்வு நடக்க இருந்தது. ஆனால் பிலிம்சேம்பர் கட்டிடம் புதுப்பிக்கப்படுவதால் ஐதராபாத்தில் தேர்வு நடக்க உள்ளது' என்றார்.
Comments
Post a Comment