தயாரிப்பாளர்களை புறக்கணிக்கிறார்கள் - வருத்தப்பட்ட தயாரிப்பாளர்!!!

Thursday,13th of September 2012
சென்னை::சமீபகாலமாக பத்திரிகை செய்திகளில் ஒரு படத்தைப் பற்றி எழுதும்போது நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றி எழுதிவிட்டு தயாரிப்பாளர்களைப் பற்றி எழுதாமல் தவிர்ப்பது வருத்தம் அளிக்கிறது. என்று தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார்.

'லிப்ரா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் படம் 'நளனும் நந்தினியும்'. புதுமுக இயக்குநர் வெங்கடேசன்.ஆர், இயக்கும் இப்படத்தின் துவக்க விழா நேற்று (செப்.13) சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் கலந்துகொண்டு படத்தை துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், அபிராமி ராமநாதன், டி.சிவா, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன், "திரைத்துறைக்கு வந்திருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் இப்படத்தின் மூலம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதே நேரத்தில் இந்த விழாவில் ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன். சமீபகாலமாக பத்திரிகைகள் படத்தயாரிப்பாளர்களை புறக்கணிக்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் ஒரு படத்தைப் பற்றி செய்திகள் எழுதும் போது அப்படத்தின் தயாரிப்பாளர்களைப் பற்றியும் எழுதுவார்கள். ஆனால், சமீபகாலமாக தயாரிப்பாளர்களைப் பற்றி எழுதுவதே கிடையாது. கேட்டால் நாங்கள் எழுதினாலும் அதை எடுத்து விடுகிறார்கள் என்று நிருபர்கள் கூறுகிறார்கள். ஒரு படம் உருவாக இயக்குநர் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தயாரிப்பாளரும் முக்கியம். அதனால் இனி ஒரு படத்தைப் பற்றி எழுதும் போது அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் பற்றியும் எழுதுங்கள்." என்று கூறினார்.

இப்படத்தில் ஹீரோவாக மைக்கேல் நடிக்கிறார். ஹீரோயினாக 'அட்டகத்தி' படத்தில் நடித்த நந்திதா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ரேணுகா, பானுசந்தர், சூரி, சாம்ஸ், அழகம்பெருமாள், சுஜாதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

அஷ்வத் என்ற புதுமுகம் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கார்க்கி, நிரஞ்சன் பாரதி ஆகியோர் எழுதுகிறார்கள். நிஷர் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெங்கடேசன்.ஆர் இயக்குகிறார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

படத்தைப் பற்றி இயக்குநர் வெங்கடேசன் கூறுகையில், "இது முழுக்க முழுக்க காதல் படம். அதை ரசிக்கும்படியாக சொல்கிறோம். இரண்டு கதாபாத்திரங்கள் பற்றிய கதை. மதுரை, சென்னை, ஈரோடு போன்ற இடங்களில் ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்திருக்கிறோம்." என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பேசுகையில், "நான் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறேன்.எம்.பி.ஏ படித்து முடித்துவிட்டு பி.எச்.டி படித்துகொண்டிருக்கிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) ஐ.டி கண்சல்டன்ட்டாக பணிபுரியும் எனக்கு சினிமா மீது இருந்த ஆர்வம்தான் இப்படத்தை தயாரிக்க வைத்தது. நல்ல கதை, நல்ல தொழில்நுட்பம் இருந்தால் அப்படம் கண்டிப்பாக ரசிகர்களை சென்று அடையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு." என்றார்.

Comments