
Monday,17th of September 2012சென்னை::தேசிய பார்வையற்றோருக்கான சங்கமான நாப் (NAB) அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக வரும் செப்டம்பர் 27ஆம் தேதி இரவு சென்னை, சத்யம் திரையரங்கில் 'தாண்டவம்' படத்தின் சிறப்பு ப்ரிமியர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஆக்ஷன் படம் 'தாண்டவம்'. யுடிவி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அனுஷ்கா, எமி ஜாக்சன், பிரபல தெலுங்கு நடிகர் கஜபதி பாபு, நாசர், சந்தானம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தில் விக்ரம் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் வசிக்கும் டேனியல்கிஷ் என்பவரிடம் சிறப்பு பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். எக்கோலொக்கேஷன் முறையை உலக முழுவதும் உள்ள பார்வையற்றவர்களுக்கு கற்றுகொடுக்கும் டேனியல்கிஷ், இப்படத்தின் மூலம் சென்னைக்கு வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி டேனியல்கிஷ் தலைமையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேசிய பார்வையற்றோருக்கான சங்கமான் நாப் அமைப்பின் மூலம் பார்வையற்றவர்களுக்கு எக்கோலோக்கேஷன் முறை பயிற்சி வகுப்புகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற இருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளாக பார்வையற்றோருக்காக பலவிதத்தில் உதவி வரும் 'நாப்' அமைக்கு உதவும் வகையில் 'தாண்டவம்' படத்தின் சிறப்பு ப்ரிமியர் காட்சிக்கு யுடிவி சிஇஓ தனஞ்செழியன் ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்காக வரும் செப்டம்பர் 27ஆம் தேதி சென்னை, சத்யம் திரையரங்கு வளாகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'தாண்டவம்' படத்தை சிறப்பு ப்ரிமியர் காட்சியாக திரையிடுகிறார்கள். இந்த ப்ரிமியர் காட்சியில் வசூலாகும் அனைத்து தொகையும் நாப் அமைப்பிற்கு நிதியாக வழங்கப்படுகிறது.
இதுபற்றி கூறிய தனஞ்செழியன், "தாண்டவம் படத்தின் மூலம் நாப்க்கு நாங்கள் செய்யும் இந்த உதவியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். இது ஒரு மாஸ் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூலை நாங்கள் நாப்புக்கு கொடுக்க முன்வந்திருக்கிறோம். மேலும் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் அனைத்துப் படங்களையும் பயன்படுத்தி இதுபோன்ற பல சமூக தொண்டு நிறுவனங்களுக்கு பல நிதி உதவிகளை செய்ய நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்." என்றார்.
இந்த சிறப்பு ப்ரிமியர் காட்சிக்காக நன்கொடை டிக்கெட் விற்கப்படுகிறது. இந்த ப்ரிமியர் காட்சியில் 'தாண்டவம்' படத்தில் நடித்த விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
Comments
Post a Comment