இந்த ஆண்டின் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் முதலிடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்தான்!

Friday, 22nd of June 2012
சென்னை::இந்த ஆண்டின் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் முதலிடத்தில் இருப்பது சந்தேகமில்லாமல் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்தான்.

ஆரம்பத்தில் இது வெறும் அனிமேஷன் படம்தானே, எப்படி வரப் போகிறதோ என்று சந்தேகம் கிளப்பியவர்கள், நாளுக்கு நாள் அந்தப் படம் குறித்த உண்மையான தகவல்கள் தெரிய வந்ததும், அமைதியாகி, ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளது சௌந்தர்யாவுக்கு நிச்சயம் நல்ல செய்திதான்!

இந்தப் படத்துக்கு தமிழ் திரையுலகம் தாண்டி, இந்தி, தெலுங்கு, ஜப்பான், கொரியா, யுஎஸ் என பல நாடுகளிலும் விசாரிப்புகள் தொடர்கின்றன. ஹாலிவுட்டில் நடிக்காமலேயே, ஹாலிவுட் நடிகருக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிக்குக் கிடைத்திருக்கிறது.

கோச்சடையான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சில பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் ரஜினி ஹாங்காங் செல்லப் போகிறார்.

இந்த நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் ரஜினி, அப்பா - மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். கதைப்படி ரஜினி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் பண்டைய தமிழ் மன்னர்கள். ரஜினி, ஜாக்கி ஷெராப் ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையில் சண்டை நடக்கிறது.

இந்த சண்டை அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது. ரஜினியின் மகனுக்கும் (ரஜினி), ஜாக்கி ஷெராப் மகனான ஆதிக்கும் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள்? எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இதில் ரஜினிக்கு உதவும் பாத்திரத்தில் சரத்குமார் வருகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்கிறார்கள். படப்பிடிப்பு குறைந்த நாட்களில் முடிந்துவிட்டாலும், தொழில்நுட்ப நேர்த்திக்காக இன்னும் சில மாதங்கள் கூட அவகாசம் தேவைப்படுகிறதாம். ஹாங்காங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தபர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments