முரட்டுக்காளை - பட விமர்சனம்!!!

Wednesday,20th of June 2012
சென்னை::நடிகர்கள்: சுந்தர் சி, சினேகா, விவேக், சுமன், சிந்து துலானி, செல்முருகன்
இசை:ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: சூர்யா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: கே செல்வபாரதி

எண்பதுகளில் ரஜினி நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற முரட்டுக் காளை படத்தை, ஒரு காட்சி கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி படம் நிகழ்த்திய மாஜிக்கை, சுந்தர் சி காளையனாக வரும் இந்த மாடர்ன் முரட்டுக்காளை நிகழ்த்தியதா? பார்க்கலாம்...

முரட்டுக்காளை கதை ரொம்ப சிம்பிள். பாசமும் வீரமும் நிறைந்த அண்ணன் காளையனுக்கு (சுந்தர் சி), 4 தம்பிகள். ஒருவருக்கொருவர் அத்தனை பாசம். தானுண்டு தன் தம்பிகளுண்டு என போய்க்கொண்டிருக்கும் காளையன் மீது, ஊர் ஜமீன் சுமனின் தங்கை சிந்து துலானிக்கு காதல்.

தனது அடியாளின் தங்கை சினேகா மீது சுமனுக்கு ஒரு கண். ஆனால் சுமனைப் பிடிக்காமல், காளையனிடம் அடைக்கலமாக வருகிறார் சினேகா.

காளையன் - சிந்து துலானி, சுமன் - சினேகா விவகாரத்தை வைத்து பெரிய விளையாட்டை ஆரம்பிக்கிறார், தன் குடும்பத்தைத் தீர்த்துக் கட்டிய சுமனை உடனிருந்தே பழிவாங்கத் துடிக்கும் திருநங்கை சரோஜா (விவேக்).

வில்லன்களுடன் உக்கிரமான சண்டைகள், ரயிலில் தொங்கிக் கொண்டு மோதல் என அதே எண்பதுகள் காலத்து பார்முலாவைக் கடந்து ஹீரோவும் ஹீரோயினும் இணைவது க்ளைமாக்ஸ்.

ரஜினியின் முரட்டுக் காளையில் ஆரம்பத்தில் காளை சண்டை வரும். இதில் ரேக்ளா ரேஸ். அதேபோல சினேகாவுடனான இரண்டு டூயட்டுகள் தவிர்த்து எந்த வித்தியாசமும் இல்லை ஒரிஜினலுக்கும் ரீமேக்குக்கும்.

ஆனால் ரஜினியின் படத்தில் இருந்த இயல்பும், சுவாரஸ்யமான காட்சியமைப்பும், நடிப்பும், எல்லாவற்றுக்கும் மேல் இனிமையான இசையும் இந்தப் படத்தில் இல்லை!

காளையனாக வரும் சுந்தர் சி, ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்கிற ரேஞ்சுக்கு அடித்துக் கொண்டே இருக்கிறார். ரயில் சண்டைக் காட்சிகளில் ஓகே. தம்பிகளுக்கு தெரியாமல் சினேகாவை காதலிக்கும் காட்சிகள் இன்னும் அழகாக வந்திருக்க வேண்டாமா...?

சினேகா அழகாக வந்து போகிறார். அவரை அநியாயத்துக்கு ஓடவிட்டு 'படமாக்கி'யிருக்கிறார்கள்!

திருநங்கையாக வரும் விவேக் காட்சிகள் ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்தாலும், சில இடங்களில் வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. ஆனால் அவரும் செல் முருகனும் பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி - வெட்னரி டாக்டராக வரும் இடங்களில் வெடிச் சிரிப்பு!

சுமனைப் பார்க்கும்போதுதான், ஜெய்சங்கர் என்ற அற்புதமான நடிகரின் அருமை புரிகிறது!

ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ஒரே ஒரு விஷயத்துக்காக நன்றி சொல்ல வேண்டும். அது, பொதுவாக எம்மனசு.. பாடலை மெட்டு, வரிகள், பின்னணி இசை, குரல் என எதையும் மாற்றாமல் ரிமேக் பண்ணியிருப்பதற்காக! மற்ற பாடல்கள், பின்னணி இசை ம்ஹூம்..! ஒளிப்பதிவு பரவாயில்லை.

எம்ஜிஆர், ரஜினி போன்ற சாதனையாளர்களின் படங்களை ரீமேக் செய்தால், அந்த பழைய மேஜிக் மீண்டும் நிகழும் என நம்பக்கூடாது என்பதை மீண்டும் உணர்த்தியுள்ள படம் இது!

-ஷங்கர்

Comments