நான் அரசியல்வாதியாக இருந்தால் சாலை விதிகளை மீறுவோருக்கு எக்கச்சக்கமா அபராதம் விதிப்பேன்! - நமீதா!!!

Wednesday, June, 06, 2012
சட்டங்கள், விதிகள் கடுமையாக இல்லாததால்தான் அதை மீண்டும் மீண்டும் மீறுகிறார்கள் மக்கள். குறிப்பாக சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் அபராதம் விதிக்க வேண்டும். நான் மட்டும் அரசியல்வாதியா இருந்தா சாலை விதியை மீறுவோருக்கு ரூ 5000, 10000 என அபராதம் விதிப்பேன் என்றார் நடிகை நமீதா.

சென்னை வர்த்தக மையத்தில் இந்தோ - மலேசிய தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் ஜெ செல்வகுமாரின் பிங் ஆட்ஸ் நிறுவனம் இணைந்து ஜூன் 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மோட்டோ ஷோ 2012 என்கிற ஆட்டோபொபைல் கண்காட்சியை நடத்துகின்றன.

வாகனம் வாங்குதல், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இங்கு ஆலோசனைகள் கிடைக்கும். போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லாமல் வாகனங்களை ஓட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த கண்காட்சியின் நோக்கங்களுள் ஒன்று.

அதற்காக மோட்டோ ஷோ 2012 வுக்கு முன், ஜூன் 10ம் தேதி காலை சென்னை பெசன்ட் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெறும் விழ்ப்புணர்வு நடை பயணம் நடக்கிறது.

'நாங்கள் சாலை விதிகளை மதிக்கிறோம்... நீங்களும் ஏன் மதிக்கக் கூடாது..?' என்கிற கேள்வியை எழுப்பி அனைவருக்கும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நிகழ்ச்சியின் நோக்கம்.

நிகழ்ச்சி குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை நமீதா மற்றும் நடிகர் பரத் கலந்து கொண்டனர்.

நமீதா பேசுகையில், "சாலை விதிகளை கண்டிப்பா எல்லோரும் மதிக்கணும். ஏன்னா... நீங்க தப்பு செய்திருக்கமாட்டீங்க... ஆனா எதிரில் வரும் ஒருவர் செய்யும் தவறு, ஒரு குடும்பத்தையே பாதிக்கிறது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஷோவுக்கு போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, எதிரில் வந்த ஒரு ட்ரக் தவறான பாதையில் வந்து மோதி, பெரிய விபத்தை ஏற்படுத்தியது. நாங்கள் சரியான ரூட்டில் போனோம். ஆனாலும் பாதிப்பு எனக்குதான். அன்னிக்கு மட்டும் நான் சீட் பெல்ட் போடாம போயிருந்தா இங்கே உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பேனான்னு தெரியல...

சீட் பெல்ட்ஸ், ஹெல்மெட்ஸ் எல்லாமே நம்ம பாதுகாப்புக்காகத்தான். இதை மறந்துடக் கூடாது.

இந்த வெயில் காலத்தில் ஹெல்மெட் போடுவது கஷ்டமாத்தான் இருக்கும். நிறைய முடி இருக்கிறவங்க, ரொம்ப ஷார்ட்டா வெட்டிக்கிட்டா சரியாகிடும்.

போக்குவரத்து விதிகள் மீறுவதற்குத்தான் என்ற மன நிலை நம் நாட்டில் இருக்கிறது.. அது மாறவேண்டும். முதல் ஒரு வாரம் ரொம்ப கண்டிப்பா இருப்பாங்க. அப்புறம் நாளாக ஆக அப்படியே கண்டுக்காம போறது வழக்கமா இருக்கு.

இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ள அரசே பப்ளிக் டாய்லெட்ஸ் கட்டியிருக்கு. ஆனா அதை பயன்படுத்தாம, பொது இடங்கள்ல அசிங்கம் பண்ணுவது, கண்ட இடத்தில் எச்சில் துப்புதல் மற்றும் குப்பைகளைப் போடுதல் இப்போதும் அதிகமாக இருக்கு.

இது நம்ம சிட்டி, நம்ம நாடு. இதை சுத்தமாக வச்சிக்காதவங்களுக்கு இங்கே வசிக்க தகுதியில்ல.

வெளிநாடுகள்ல ரொம்ப கண்டிப்பா இருக்காங்க இந்த விஷயத்தில். நான் அரசியல் வாதியாக இருந்தால் அப்படிச் செய்பவர்களுக்கு 5000 ,10000 என்று மிகக்கடுமையான அபராதம் விதிப்பேன்.." என்றார்.

பரத்...

நிகழ்ச்சியில் பங்கேற்ற பரத் பேசுகையில், "நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால சொல்லல... உண்மையிலேயே நான் சாலை விதிகளை மிகவும் மதிப்பவன். என் டிரைவருக்கும் கூட இதைச் சொல்லி வைத்திருக்கிறேன். இரவு 12 மணியாக இருந்தாலும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் நின்று செல்லச் சொல்லியிருக்கிறேன்.

அதேபோல பொது இடங்களில் ஒரு முறை கூட, ஒரு சின்ன காகிதத்தைக் கூட நான் வீசியதில்லை. குப்பை கொட்டுவதற்காக உள்ள இடத்தைத் தேடிச் சென்று போடுவதுதான் என்வழக்கம்...

போக்குவரத்து விதிகளை ஒரு சிலர் மட்டும் பின்பற்றினால் போதாது... நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்...

இந்த மாதிரி விழிப்புணர்வு சம்பந்தமான விழாக்களுக்குக் கூப்பிடும் போது உடனே ஒத்துக் கொள்கிறேன்... அவர்களை பலமுறை அழைக்க வைத்து அலைக்கழிப்பதில்லை... போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது நமது கடமை!," என்றார்.

வெரிகுட்!

Comments