விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை!!!

Sunday, 24th of June 2012
சென்னை::விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து கமல்ஹாசனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது.

இந்து மக்கள் கட்சதியின் தலைவரான கண்ணன் இதுதொடர்பாக சர்ச்சையை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்?

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.

Comments