இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலும் ஒலிம்பிக் தொடக்க விழாவில்!!!

Friday, 29th of June 2012
சென்னை::இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறவுள்ளது.

ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் இந்தியத் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களின் இசை ஒரே நேரத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களும், குறிப்பாக தமிழ் ரசிகர்கள் பெரும் குஷியடைந்துள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜா முன்பு இசையமைத்த ராம் லட்சுமண் திரைப்படத்தில் இடம் பெற்ற நான்தான் ஙொப்பண்டா என்ற பாடல் இடம் பெறுகிறது. இந்த நிலையில், தற்போது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது.

திரைப்பட இயக்குநர் டேணி பாயில் தலைமையிலான விழாக் குழுவினர்தான் தொடக்க விழா நிகழ்ச்சிகளை இறுதி செய்து வருகின்றனர். இதே பாயில் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளையும் அவர் வென்றார்.

இந்த நிலையில் பாயிலுடன் மீண்டும் இணைந்துள்ளார் ரஹ்மான். ஒலிம்பிக் தொடக்க விழாவில் எந்த மாதிரியான பங்களிப்பை ரஹ்மான் தரவுள்ளார் என்பது தெரியவில்லை.

இருப்பினும் ஏற்கனவே உருவாக்கிய பாடலாக இல்லாமல்,பிரத்யேகப் பாடலாக ரஹ்மான் உருவாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments