இளையராஜாவையும் ஹாலிவுட்டுக்கு கூட்டிச் செல்வாரா கமல்ஹாசன்?!!!

Monday, 11th of June 2012
சென்னை::ஆஸ்கர் நாயகன், உலக நாயகன் என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் இன்று ஹாலிவுட் நாயனாகியுள்ளார். ஆஸ்கர் விருது குறித்து கமல் இப்போதெல்லாம் பேசுவதில்லை. காரணம், அது நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விருது என்பது அவரது கருத்து.

இந்த நிலையில், இன்று ஹாலிவுட்டுக்கு கிளம்புகிறார் கமல். சாதாரண நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் ஹாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார். இது தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே முதலாவது முயற்சியாகும்.

இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஷேகர் கபூர் இயக்குநராக மட்டும் லண்டன் வரை போயுள்ளார். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகர் நடிகராகவும், இயக்குநராகவும் ஒரே நேரத்தில் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாவது என்பது இதுவே முதல் முறை என்று தெரிகிறது. அந்த வகையில் கமல் செய்யப் போகும் இந்த புதிய படம் ஒரு சாதனை முயற்சி என்று தாராளமாக கூறலாம்.

இந்த நேரத்தில் சின்னதாக ஒரு ஏக்கமும், எதிர்பார்ப்பும் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடம் எழுந்து நிற்கிறது. அது இசைஞானி இளையராஜாவையும், தன்னுடன் கலைஞானி கமல்ஹாசன் ஹாலிவுட்டுக்குக் கூட்டிச் செல்வாரா என்பதே.

இந்த எதிர்பார்ப்பு என்பது உரிமையுடன் கூடியதாகவே இருக்கிறது. காரணம், இளையராஜாவையும், கமல்ஹாசனையும் இணைந்து ரசித்தவர்களுக்கு, ஏன் கமல்,ராஜாவை கூட்டிச் செல்லக் கூடாது என்ற உரிமையுடன் கூடிய கேள்வி எழுவதால்.

ராஜா மீது கமல்ஹாசனுக்கு உள்ள நட்பு, மரியாதை, உரிமை, உறவு அனைவரும் அறிந்ததே. கமல்ஹாசனுக்கு எத்தனையோ படங்களில் ஏற்றம் கொடுத்தவர் இளையாராஜா. அதேபோல இளையராஜாவின் இசைப் பசிக்கும், திறமைக்கும் சரியான தீனி போட்டுக் கொடுத்தவர் கமல். இருவரும் இணைந்த படங்கள் எல்லாமே இமயம் தொட்டவை. கடைசியாக இருவரும் சேர்ந்து மிரட்டிய விருமாண்டி படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி இன்று வரை ரசிகர்களின் மனதில் இன்னும் ரீங்காரமிட்டபடியே இருக்கின்றன.

இன்று அருமையான வாய்ப்பு ஒன்று 57வது வயதில் கமல்ஹாசனைத் தேடி வந்திருக்கிறது. ஹாலிவுட்டுக்குள் நுழைவது அதிலும் இயக்குநராகவும், நடிகராகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அந்த வாய்ப்பு கமல்ஹாசனைத் தேடி வந்திருக்கிறது.

தேவர் மகனைப் போல, அபூர்வ சகோதரர்களைப் போல அருமையான ஒரு ஜனரஞ்சகமான படத்தை ஹாலிவுட் ஸ்டைலில் தரப் போவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். அப்படியானால் மேற்கண்ட இரு படங்களையும் சூப்பர் ஹிட்டாக்க உதவிய இன்னொரு கரமான இளையராஜாவும் இந்த ஹாலிவுட் படத்தில் இணைவாரா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இந்தக் கதை இந்திய பின்னணியுடன் கூடிய மேற்கத்திய கதை என்று பேரி ஆஸ்போர்ன் ஏற்கனவே சொல்லியுள்ளார்.அப்படி இருக்கும்போது கமல்ஹாசன் ரசனை புரிந்த, ராஜா இசையமைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று இருவரின் ரசிகர்களும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அப்படி நடந்தால், கமல் அதைச் செய்தால், பாரெங்கும் ஏற்கனவே பரந்து விரிந்து வலம் வந்து கொண்டிருக்கும் நமது ராஜாவின் இசைக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இளையராஜாவின் இசை மாயாஜாலத்தை ஹாலிவுட்டினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

கமல்ஹாசனும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றி, இசை விருந்தளித்து எட்டு வருடங்கள் ஓடி விட்டன. இப்போது ஹாலிவுட் படம் மூலம் இருவரும் இணையும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏகமாகியுள்ளது.

கமல் செய்வாரா...?

Comments