ஆஸ்போர்னுடன் கை கோர்த்து ஹாலிவுட்டுக்குள் புகுகிறார் கமல்-இயக்கமும் அவரே?!!!

Sunday, 10th of June 2012
நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தியப் பின்னணியுடன் கூடிய கதையில் அவர் நடிக்கிறார். பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை உருவாக்குகிறார்.

தி லார்ட் ஆப் ரிங்ஸ் உள்ளிட்ட பல புகழ் பெற்ற படங்களை உருவாக்கியவர் ஆஸ்போர்ன். கமல்ஹாசனின் ஹாலிவுட் அறிமுகம் குறித்த அறிவிப்பை அவரும், ஆஸ்போர்னும் இணைந்து சிங்கப்பூரில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவின்போது வெளியிட்டனர்.

அப்போது கமல் பேசுகயில், உலகம் நமது பணிகளை நிறைய பார்த்திருந்தாலும், ஆஸ்போர்ன் போன்றவர்கள் நம்மை அணுகும்போதுதான் நாம் இவ்வளவு செய்திருக்கிறோமா என்பதை உணர முடிகிறது.

பேரி ஆஸ்போர்ன் என்னை அணுகிய விதம் எனது இதயத்தைத் தொட்ட விஷயம். நான் மதிக்கும் பல ஹாலிவுட் பிரபலங்கள் இவருடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். பிரான்சிஸ் போர்ட் கப்போலா உள்பட ஹாலிவுட்டின் சாம்பயின்களாக போற்றப்படும் பலரும் இவருடன் பணியாற்றியுள்ளனர் என்றார்.

ஆஸ்போர்ன் பேசுகையில், கமல்ஹாசனை இந்திய மற்றும் மேற்கத்திய கலவையாக எனது படத்தில் காட்டவுள்ளேன். ஹாலிவுட் ஸ்டைலில், இந்திய வரலாறு மற்றும் பாரம்பரியத்தை சொல்லத் திட்டமிட்டுள்ளோம்.

கமல்ஹாசன் ஒரு சினிமா என்சைக்ளோபீடியா. அவரை சந்தித்தது பெருமையாக இருக்கிறது. தனது விஸ்வரூபம் படத்திற்காக ஹாலிவுட் வந்தபோது என்னை சந்தித்தார் கமல். அவருடைய படத்தைப் பார்க்க வருமாறு அழைத்தார். படம் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது.

பிறகுதான் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசத் தொடங்கினோம். அவருக்கு இலக்கியத்திலும், சினிமாவிலும் மிகப் பெரிய ஞானம் உள்ளது. அதை அவருடன் பேசியபோதுதான் உணர்ந்தேன். அவருடன் பேசியதையே பெருமையாக, கெளவரமாக கருதுகிறேன்.

எனக்கு அவர் பல ஐடியாக்களைக் கூறினார். அவை என்னை ஈர்த்து விட்டன. பிறக இணைவது என்ற முடிவுக்கு வந்தேன் என்றார் ஆஸ்போர்ன்.

படத்தின் கதை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், அதை இன்னும் முடிவு செய்யவி்ல்லை. ஒரு ஐடியாவை தற்போது இறுதி செய்து விவாதித்து வருகிறோம். இது ஒரு சர்வதேசப் படமாக இருக்கும். உலகளாவிய கதையாக இருக்கும். இணைந்து பணியாற்றுவது என்பது மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நடிகராக என்னை நடிக்கச் சொன்னாலும் சரி, ஒரு எழுத்தாளராக திரைக்கதை அமைக்கச் சொன்னாலும் சரி, அல்லது ஒரு இயக்குநராக என்னை இயக்கச் சொன்னாலும் சரி அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றார் கமல்.

கமல் சொல்வதைப் பார்த்தால் இப்படத்தை கமல்ஹாசனே இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு வேளை இப்படத்தை கமல்ஹாசனே இயக்கினால், ஹாலிவுட் படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து, படத்தையும் இயக்கிய முதல் இந்திய நடிகர், தமிழர் என்ற பெருமை கமல்ஹாசனுக்குக் கிடைக்கும்.

Comments