நரிக்குறவர் சமூக மாணவன் மருத்துவம் படிக்க நடிகர் ஜீவா உதவி!

Thursday,21st of June 2012
சென்னை::பிளஸ் 2 தேர்வில் 1167 மதிப்பெண் பெற்ற நரிக்குறவர் சமூக மாணவன் மருத்துவம் படிக்க, நடிகர் ஜீவா உதவி செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகிலுள்ள வெள்ளிமலையை சேர்ந்த முகராசி என்பவர் மகன் ராஜபாண்டி (18). நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவரது தாயார் வெள்ளச்சி, பாசி மற்றும் மாலை கோர்த்தல், விவசாயக் கூலி வேலை செய்கிறார். ராஜபாண்டியை அவரது பெரியப்பா லட்சுமணன், ஊத்தங்கரை தனியார் பள்ளியில் சேர்த்தார். பாசி மாலை தயாரித்து விற்பனை செய்தும், மாந்தோப்புக்கு காவல் பணிக்கு சென்றும் ராஜபாண்டியை படிக்க வைத்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவில், 1167 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த ராஜபாண்டி, ரேங்க் பட்டியலில் 197.5 கட் ஆப் மார்க் வாங்கினார். வறுமையில் இருந்தாலும், நன்கு படித்து கல்வியில் சாதனை படைத்த ராஜபாண்டி, மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால், அதற்கு பணம் இல்லாமல் தவித்தார். இதுகுறித்த செய்தி, கடந்த 3,ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது.

இச்செய்தியை தனது மானேஜர் பி.டி.செல்வ குமார் மூலம் அறிந்த ஜீவா, ராஜபாண்டி மருத்துவம் படிக்க உதவுவதாக அறிவித்தார். உடனே அவரை சென்னைக்கு வரவழைத்தனர். தாயார் மற்றும் பெரியப்பாவுடன் நேற்று மாலை சென்னை வந்த ராஜபாண்டி, ஜீவாவை சந்தித்தார். கல்விக் கட்டணம் செலுத்த முதல் தவணையாக, 37 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை ராஜபாண்டியிடம் வழங்கிய ஜீவா, பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: டிப்ளமோ இன் மல்டி மீடியா கோர்ஸ் படித்தேன். மேற்கொண்டு படிக்காமல், நடிக்க வந்து விட்டேன்.

நான்தான் சரியாகப் படிக்கவில்லை. நன்றாகப் படிக்கும் வசதியற்ற மாணவர்களை மேற்படிப்பு படிக்க வைப்போமே என்ற எண்ணத்தில், ராஜபாண்டி பற்றி கேள்விப்பட்டதும் அவரை வரவழைத்தேன். எம்.பி.பி.எஸ் முடித்து, எம்.எஸ் படிக்க விரும்பினாலும், ராஜபாண்டிக்கான மொத்த செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரை டாக்டராக்குவதே லட்சியம். இன்று நான் ராஜபாண்டிக்கு செய்த உதவியைப் பார்த்துவிட்டு, மற்றவர்களும் இதுபோல் உதவினால் சந்தோஷப்படுவேன்.
இவ்வாறு ஜீவா பேசினார்.

பிறகு ராஜபாண்டி கூறும்போது, ‘இதுவரை எனக்கு பலர் உதவி செய்துள்ளனர். நடிகர் ஜீவா செய்துள்ள உதவி பெரியது. அதை மறக்க மாட்டேன். அவரது விருப்பப்படி டாக்டராகி, ஏழைகளுக்கு மருத்துவம் பார்ப்பேன்’ என்றார். அப்போது அவரது குரல் தழுதழுத்தது. மேற்கொண்டு பேச முடியாமல் கண்கலங்கினார். இக்காட்சி அனைவரது மனதையும் உருக்குவதாக இருந்தது.

Comments