"பெப்சி' தேர்தலில் விசு - அமீர் இடையே பலத்த போட்டி!!!

Tuesday,12th of June 2012
சென்னை:சினிமா தொழிலாளர்கள் அமைப்பான, "பெப்சி' நிர்வாகிகள் தேர்தல், சூடுபிடித்துள்ளது. தலைவர் பதவிக்கு, இயக்குனர் விசு - அமீர் இடையே, பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) நிர்வாகிகள் தேர்தல், வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில், தலைவர் பதவிக்கு, திரைப்பட இயக்குனர்கள் விசுவும், அமீரும் போட்டியிடுகின்றனர். பொதுச் செயலர் பதவிக்கு, சிவாவும், பொருளாளர் பதவிக்கு, சண்முகமும், தலா ஐந்து துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலர்கள் பதவிகளுக்கு, 10 பேரும் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு, இதுவரை இச்சங்கத்திற்கு நடந்த தேர்தலில், இப்படி பலத்த போட்டி நிலவியதில்லை என்றும், "பெப்சி'யினர் கூறுகின்றனர். தேர்தலில், விசு வெற்றி பெற்றால், சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை, எளிதாக பேசி முடிவு செய்யப்படும். மூத்தவரான விசு, சினிமாவில் முக்கியமானவராக இருப்பதால், அரசுடன் பேசி, சினிமா தொழிலாளர்களுக்கு சலுகைகளை பெற்றுத் தர முடியும். சினிமா தொழிலில் எந்த பிரச்னையானாலும், அதை சுமுகமாகக் கையாண்டு, எளிதாக தீர்க்கும் அனுபவம் விசுவுக்கு உள்ளது என்றும் கூறி, விசுவின் ஆதரவாளர்கள் ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். "சினிமா பிரச்னைகள் அனைத்தையும் எளிதாக தீர்த்து வைக்க என்னால் முடியும்' என விசுவும், நேரில் உறுதி கூறி, ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்.
பெப்சி தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை பேச்சு வார்த்தை, சுமுகமாக முடியாததற்கு, இயக்குனர் அமீர் மறைமுகக் காரணம், அவரது தனிப்பட்ட பிரச்னைக்காக பெப்சியினரை பகடை காயாக்கி, சினிமா படப்பிடிப்புகள் தடைபடக் காரணமாக இருந்தார் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று அமீர் தலைவராக வந்தால், தயாரிப்பாளர்களிடம் போராடி உரிய சம்பளத்தை பெற்றுத் தருவார். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அமீர் நமக்காக களமிறங்குவார் என்றும் கூறி, சினிமா தொழிலாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த பல நிர்வாகிகள், அமீருக்காக ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.

Comments