35 லட்சத்தில் தயாரான 'ஆரோகணம்' - பாராட்டு மழையில் நனையும் லட்சுமி ராமகிருஷ்ணன்!!!

Thursday,21st of June 2012
சென்னை::'யுத்தம் செய்' படத்தில் மொட்டை அடித்து நடிப்பின் மீது தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், முதல் முறையாக இயக்கியிருக்கும் படம் 'ஆரோகணம்'. இப்படத்தை குறைந்த நாட்களில் குறைந்த முதலீட்டான ரூ.35 லட்சத்தில் எடுத்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு திரையுலக பிரமுகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை சரிதாவின் தங்கையான விஜி சந்திரசேகர், மாரிமுத்து, உமா, வடிவுக்கரசி, ஜெயபிரகாஷ், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள ஏவிஏ புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. 'மெரீனா', 'அரவான்' போன்ற படங்களை வெளியிட்டவரும், 'பசுபதி மே ராசாக்காபாளையம்', 'கனகவேல் காக்க', 'காதல் கதை' போன்ற படங்களை தயாரித்துவருமான ஜே.எஸ்.சதிஷ் குமார், தனது ஜே.எஸ்.கே பிலிம்ஸ் கார்ப்பொரேசன் மூலம் இப்படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 19) சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் குறுகிய நாட்களில், குறுகிய பட்ஜெட்டில் இப்படிப்பட்ட தரமான படத்தை எடுத்தது ஆச்சரியமான விஷயம் என்று லட்சுமி ராமகிருஷ்ணனை பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய பாலச்சந்தர், "லட்சுமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆரோகணம் படத்தை நானும் பார்த்தேன். ரொம்ப நீட்டான, கச்சிதமான படம். மேக்கிங் எல்லாம் அருமை.

படத்தின் பட்ஜெட் பற்றி சொன்னார்கள். நான் ஆச்சர்யப்பட்டுவிட்டேன். இவ்வளவு பட்ஜெட்டில் படம் எடுக்க முடியும் என்றால், நான் கூட ஒரு கதையை தயார் பண்ணி எடுக்கலாமே... சும்மாதானே இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்துவிட்டது ஆரோகணம் படம்.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவுக்கு மாநில மொழிப்படம் என்ற அந்தஸ்துதான். ஆனால் இன்று தமிழ் சினிமாவை உலகமே கொண்டாடுகிறது. எந்த நாட்டுக்குப் போனாலும் தமிழ் சினிமாவை பெருமையாகப் பேசுகிறார்கள். இந்தப் படம் உலகம் பேசும் அளவுக்கு உள்ளது." என்றார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில், " "ஒரு குழந்தை தப்புத் தப்பா, ஒருவித அறியாமையுடன் (Ingnorance) செய்த தயாரிப்பை பாராட்டுவதுபோல, குறைகளைப் பொறுத்துக் கொண்டு என் படத்தைப் பாராட்டியமைக்கு சாதனை இயக்குநர்கள், சக கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இதே அறியாமையுடன் தொடர்ந்து படங்கள் செய்ய விரும்புகிறேன். காரணம் அறியாமை தருகிற துணிச்சல்தான் புதிய முயற்சிகளைச் செய்ய வைக்கிறது. நான் அப்படியே இருக்க விரும்புகிறேன்.இந்தப் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர். சம்பளம்கூட வாங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்," என்றார்

Comments