அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை விழா - எஸ்பி முத்துராமன், சுஹாசினி பங்கேற்பு!!!

Sunday, ,May, 20, 2012
அமெரிக்காவில் வாழும் தமிழர்களால், தமிழகத்தின் நலனுக்காகநடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் 37வது மாநாடு ஹூஸ்டன் நகரில் வரும் மே 25-ம் தேதி தொடங்குகிறது. தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த அறக்கட்டளையின் சார்பில் வருடந்தோறும் மாநாடுகள் நடத்தி கிடைக்கப்பெறும் நிதி ஆதாரத்தைக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

சென்ற ஆண்டு, கூடுதலாக ஊரகப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.

முதல்கட்டமாக சிவகங்கை மாவட்டம், மதுரவாயல் தாலுகா, வேதாரண்யம் உள்ளிட்ட ஊரகப்பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. பள்ளிக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், கழிவறை உள்ளிட்ட சுகாதாரவசதிகள், மாணவர்களுக்கு இலவசமாக காலணிகள், அமெரிக்காவில் உள்ளது போல் வீட்டிலிருந்து பள்ளி வரை இலவச போக்குவரத்து, அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் பயிற்சி வகுப்புகள், கணிணிக்கல்வி, வசதியற்ற பெற்றோர்களுக்கு திட்டத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு என பன்முகத்திட்டமாக இது செயல்பட்டுவருகிறது. தமிழகத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘களஞ்சியம்’ அமைப்புடன் கைகோர்த்து இதை நடத்தி வருகிறார்கள்.

மாணவர்களும் ஆர்வத்தோடு செருப்பு அணிவது முதல், சுகாதாரமுறையில் கழிப்பறை உபயோகப்படுத்துவது, நாள் தவறாமல் பள்ளிக்கு வருகை, படிப்பில் ஆர்வம், அறிவுத்திறனை அதிகப்படுத்திக் கொள்ளுதல் என தங்களை மேன்மைபடுத்திக் கொள்கிறார்கள். திட்டம் அமலாக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் வருகை 36 சதவீத்த்திலிருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தி விடும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப் பட்டுள்ளது.

37 வது தேசிய மாநாடு

மே 25ந்தேதி முதல் நான்கு நாட்கள் தமிழ்நாடு அறக்கட்டளையின் தேசிய மாநாடு ஹூஸ்டனில் நடைபெறுகிறது. தேசிய மாநாடு குறித்தும், அறக்கட்டளையின் பொது சேவைகள் குறித்தும் மாநாட்டு செய்தி மற்றும் விளம்பர பொறுப்பாளர் பாலா பாலச்சந்திரன் அவர்கள் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ், சான் அன்டோனியோ, ஆஸ்டின் மற்றும் ஹூஸ்டன் நகர தமிழ்ச் சங்கங்கள் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் மாநாட்டு பணிகளிலும் இணைந்து செயல்படுகிறார்கள்.

பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், கலைஞர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பல தமிழ் அறிஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இயல் இசை நாடகம் என பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், பட்டிமன்றம், கவியரங்கம், மருத்துவத்துறையின் தொடர்படிப்பிற்க்கான கருத்தரங்கம், அமெரிக்க தமிழ்க் குடும்பங்களுக்கு திருமண தொடர்புக்கான அறிமுக உரையாடல் நிகழ்ச்சிகள், அமெரிக்க தமிழ் இளைஞர்களுக்கான கருத்தரங்கம், தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், தொழில் கண்காட்சி மற்றும் எக்ஸ்போ என பல்வேறு அம்சங்களுடன் நடைபெறுகிறது.

'நந்தா’, ‘மௌனம் பேசியதே’ திரைப்பட தயாரிப்பாளருமான ராஜன் ராதாகிருஷ்ணன் கலை நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பு ஏற்றுள்ளார். எஸ்.பி முத்துராமன், சுகாசினி, ஞானசம்மந்தம், பர்வீன் சுல்தானா, உமையாள் முத்து, நெல்லை கண்ணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ஹரிசரண், ராகுல் நம்பியார், சைந்தவி பங்கேற்கும் இசை நிகழ்சிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கூடுதலாக புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமியின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

தமிழ்நாடு அறக்கட்டளையின் வரலாற்றில் முதன் முறையாக டி.என்.எஃப் ஐடல் என்ற நட்சத்திரப்போட்டி நடைபெற்றது. பிரபல பின்ணணி பாடகி ‘ரோஷிணி’ சிறப்பு நடுவராக பங்கேற்றார்.

மாநாட்டில் அனைவரும் பங்கேற்பதற்கு வசதியாக தனித்தனி பிரிவுகளில் நான்கு நாட்கள் பாஸ், ஒரு நாள் பாஸ், இசை நிகழ்ச்சி மட்டும் என தனித்தனி நுழைவுக் கட்டணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக்கொண்டு ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும்’ திட்டத்தை தமிழகம் முழுவதும் பரவலாக செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் மெரின் ராஜதுரை கலந்து கொண்டு மாநாட்டு வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார். மற்றும் மேரிலாண்ட் மாகாண வெளியுறவுத் துறை துணைச்செயலாளர் ராஜன் நடராஜனும் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிடுகிறார். மதுரை தியாராயர் பொறியியல் கல்லூரி தலைவரும், மற்றும் தொழிலதிபருமான கருமுத்து கண்ணனுக்கு சிறந்த சேவையாளருக்கான பரிசு அளிக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் பாராட்டு

மாநாட்டு குழுத் தலைவர்கள் சாம் கண்ணப்பன் மற்றும் டாக்டர் பத்மினி ஆகியோர் சென்னையில், அமெரிக்கன் கன்சல் ஜெனரல் ஜெனிஃபர் மெக்கின்டயரை சந்தித்து தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழக திட்டப்பணிகள் குறித்து விளக்கமாக கூறினர். நடைபெறவிருக்கும் மாநாடு மற்றும் அமெரிக்க தமிழர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதித்தனர். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த கன்சல் ஜெனரல் ஜெனிஃபர் மெக்கின்டயர் மிகவும் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், கன்சலேட் மூலம் அனைத்து வித உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்
.

Comments