நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக சரத்குமார் போட்டி!!!

Saturday, May, 19, 2012
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் நடிகர் சரத்குமார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த நடிகர்-நடிகைகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நாடக நடிகர்களையும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்த சங்கத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலிதேவி, ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர்.

நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2012-2015-ம் ஆண்டுக்கான தேர்தல், அடுத்த மாதம் (ஜுன்) 10-ந் தேதி நடைபெற இருக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. 25-ந் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடையும். 30-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

ஜுன் 10-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும். கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்துகிறார்.

மூன்றாவது முறை

கடந்த இரண்டு முறையாக தலைவராக இருந்து வரும் சரத்குமார், மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அவருடன், இப்போது துணைத்தலைவராக இருந்து வரும் விஜயகுமார், பொதுச்செயலாளராக இருந்து வரும் ராதாரவி, பொருளாளராக இருந்து வரும் வாகை சந்திரசேகர் ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

இந்த அணியை எதிர்த்துக் களமிறங்க ஒரு குழு மும்முரமாகி வருகிறது. இதுகுறித்த விவரங்கள் நாளை மறுநாள் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

Comments