'கிராமத்துக்குப் போய் நாலு பசுமாடு வாங்கிப் பிழைப்பேன்!' - 'மெரினா' பாண்டிராஜ் அறிக்கை!!!

Thursday, May ,03, 2012
மெரினா படம் தொடர்பான மோசடி புகார்கள், நீதி மன்ற உத்தரவுகள் காரணமாக தன்னைப் பற்றி தவறான செய்திகள் பரவி வருவதாக இயக்குநர் பாணடி ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு அவர் விடுத்த அறிக்கை விவரம்:

ஒரு வாரமாக பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் பல லட்சம் மோசடி, கொலை மிரட்டல், கொமிஷனரிடம் புகார், மெரினாவை பிற மொழிகளில் வெளியிடத் தடை என்று என்னைப் பற்றிய தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

வெளியுரில் எனது அடுத்த பட வேளைகளில் இருந்ததாலும், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாலும், எனது சட்டத்தரனி அமைதி காக்கும்படி கூறியதாலும் இதுவரை அமைதி காத்தேன்.

பசங்க புரொடக்ஷன்ஸ் என்ற எனது நிறுவனம் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னிடம் மேனேஜராக வேலை பார்த்த பி. சாம்பசிவம், மாதா மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு, நான் கொடுத்த உரிமையை தவறாகப் பயன்படுத்தி எனது நிறுவனத்தில் உள்ள Voucher Padகளைத் திருடிச் சென்று, எனது கம்பெனி பெயரிலேயே போலி கணக்குகளை தயார் செய்து (அதுவும் படப்பிடிப்பு எதுவும் நடக்காத நாட்களில் கூட) இன்று பாண்டிராஜ் தயாரிப்பாளர் இல்லை, இவர்தான் தயாரிப்பாளர் என்று பொய் வழக்கு போட்டுள்ளார்கள்.

ரூ 12 .50 லட்சம் போட்டவர் தயாரிப்பாளர் என்றால் கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்தவனை என்னவென்று சொல்வது? அவர்கள் கொடுத்த 12.50 லட்சம் கணக்கிற்கு நீதிமன்ற உத்தரவின் படி, 15 லட்சமாக நீதிமன்றம் மூலமே வழங்கி விட்டேன்.

பெருந்தன்மையாக இணை தயாரிப்பாளர் என்ற மரியாதையையும் கொடுத்து விட்டேன். இவர் முதலீட்டிற்கான லாபத்தை இறுதி செய்ய நீதிமன்ற வலியுறுத்தலின் படி ஆடிட்டர் மூலம் ஆடிட்டிங் நடந்து வருகிறது.

அதற்குள் இவர்கள் மேலும் பல லட்சங்களை பறிப்பதற்காக பொய் செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.

இவர்கள் இரண்டு பேர் சொல்லும் பொய் எப்படி உண்மையாகிவிடும்? மெரினா திரைப்படத்தில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நடந்த உண்மைகள் அனைத்தும் தெரியும். அதில் நடித்த சிறுவர்கள் கூட இவர்கள் செயலை பார்த்து சிரிப்பார்கள்.

இவர்கள் இருவரும் யார்? ஆர்.பாலமுருகன் என்பவர் பெரம்பலூரில் நில மோசடி வழக்கில் சிக்கி அவர் மேல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

சாம்பசிவம் என்னும் இன்னொருவர் உதவி இயக்குனர் ஒருவரை ஏமாற்றி செக் மோசடி வழக்கில் சிக்கியவர். இவர் மேல் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இவர்கள் இருவரின் வழக்கு பற்றிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.

வழக்குகளை வழக்கமாக சந்தித்து வரும் இவர்கள், என் மீது மோசடி வழக்கு போட்டுள்ளார்கள். நான் பண மோசடி செய்தேனா? இல்லை என்னை மற்றவர்கள் பண மோசடி செய்துள்ளார்களா? என்று தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கள் என அனைவருக்கும் தெரியும்.

பணத்திற்காக எதையும் செய்யும் ஈனப் பிறவி இல்லை நான். பணம் வேண்டுமென்றால் இன்று பல கோடிகளை என்னால் அட்வான்ஸாக மட்டுமே பெற்றிருக்க முடியும். யாரையும் பண மோசடி செய்து பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

என் திறமைக்கும், நேர்மைக்கும் ஆண்டவன் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறான். அப்படி ஒரு நிலைமை வந்தால் எனது சொந்த கிராமமான விராச்சிலைக்கே சென்று நான்கு பசு மாடுகளை வாங்கி மேய்த்து பிழைப்பேனே தவிர அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி குடிக்க ஆசைப்பட மாட்டேன்.

தினமும் ஏதாவது செய்தி கொடுத்தால் பாண்டிராஜ் பயந்து விடுவான், அவனை மிரட்டி பணம் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

என்னைப் பற்றியும், எனது நேர்மையை பற்றியும் இந்த விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே என்ன நடந்தது என்பது பற்றியும், என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், என் உதவியாளர்களுக்கும், சக கலைஞர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

பசங்க படத்திற்காக சர்வசேத மற்றும் தேசிய விருது பெற்றது முதல் இன்று வரை எனது படைப்புகளுக்கும், எனக்கும் பேராதரவை வழங்கி வரும் பத்திரிக்கையாளர்கள், அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் என் நலம் விரும்பிகளுக்கும் நடந்த உண்மைகளை தெரியப்படுத்தவே இந்த தன்னிலை விளக்கத்தை அளிக்கிறேன். இவர்களை நீதியும், நீதிமன்றமும் பார்த்துக் கொள்ளட்டும்.

Comments