தொலைக்காட்சி தொடர்கள்... கண்ணீரில் மூழ்கடிக்கும் அம்மாக்கள்!!!

Sunday, ,May, ,13, 2012
சினிமாவில் அம்மா சென்டிமென்ட் இல்லாவிட்டால் படமே ஓடாது என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே மாற்ற முடியாத ஒன்றாக இருந்து வந்துள்ளது. திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடித்து பின்னர் அந்த காதாநாயகர்களுக்கே அம்மாவாக நடித்தவர்கள் இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அழகான அம்மா, அழுது அழுது ஆர்பாட்டம் பண்ணும் அம்மா, வில்லத்தனமான அம்மா என பலவித அம்மாக்கள் இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் கோலோச்சி வருகின்றனர். அவர்களைப் பற்றி அன்னையர் தின ஸ்பெசலாக ஒரு ரவுண்ட் அப்.

அழுகை வடிவுக்கரசி

அம்மா என்றால் பிள்ளைகளை நினைத்து அழுதபடியேதான் இருப்பார் என்பதாக உள்ளார் வடிவுக்கரசி. இவர் சின்னத்திரையில் நெடுந்தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பெரும்பாலான தொடர்களில் அம்மாவாக நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் வரும் திருமதி செல்வம் நெடுந்தொடரில் அழுது பிழியும் அம்மாவாக வரும் வடிவுக்கரசி தனது மூன்று மகள்களின் வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டே இருக்கிறார். அதே சமயம் தனது மகளின் வாழ்க்கைக்கு குறுக்கே வரும் பெண் என்று தெரிந்த உடன் ஆக்ரோசமாக பெருக்குமாறினால் வெளுத்து வாங்குகிறார்.

அதே வடிவுக்கரசிதான் அமைதியாக எதையும் பொறுமையாக கையாளும் அம்மாவாக உதிரிப்பூக்கள் தொடரில் நடித்திருக்கிறார். ஒரு நல்ல விசயம் இதில் அவ்வளவாக அழுவதில்லை. அதற்கு பதிலாக தொடரில் மூன்று குழந்தைகளின் அப்பாவாக நடித்துள்ள சேத்தன் அழுகிறார்.

திருமதி செல்வம் பாக்கியம்

அதே தொடரில் பாக்கியமாக வரும் இன்னொரு அம்மா தனது மகன், மகளுக்கு மட்டும் சுயநலமாக நடந்து கொண்டு வில்லத்தனம் செய்யும் அம்மாவாக வருகிறார். அவரேதான் தியாகம் தொடரில் மூன்று பெண்குழந்தைகளுக்கு பாசக்கார அம்மாவாக, பெண்ணின் திருமணத்தை எண்ணி அழும் அம்மாவாக நடித்திருக்கிறார்.

முத்தாரம் சத்ய பிரியா

நடிகை சத்யப்பிரியா கோலங்கள் தொடரில் தேவயானியின் அம்மாவாக நடித்தவர். எப்பொழுது பார்த்தாலும் அதில் அவருக்கு அழுகைக்கு பஞ்சம் இருக்காது. அதே சத்யப்பிரியா முத்தாரம் தொடரில் தேவயானியின் மாமியாராக வருகிறார். முதலில் பிடிக்காத மருமகளாக இருந்த தேவயானி இப்பொழுது சத்யப்பிரியாவின் பாசக்கார மருமகளாக மாறியிருக்கிறார்.

நளினி நடிக்கும் தொடர்கள்

சுதா சந்திரன்

சன், கலைஞர், ஜெயா என சுதாசந்திரன் தொடர்களில் நடித்தாலும் தென்றல் தொடரில் வில்லத்தனமான அம்மாவாக நடித்து வருகிறார் சுதா சந்திரன். இந்த கதாபாத்திரம் அவருக்கு புதிது. ஏனெனில் பொண்டாட்டி தேவை என்ற காமெடி சீரியலில் அம்மாவாக நடித்த அனுபவம் மட்டுமே இருந்தது. இப்பொழுது வில்லத்தனம் செய்யும் அம்மாவாக வருகிறார். போகப்போகத்தான் தெரியும் அவரது ஆற்றல்.

கஸ்தூரி லதா

நீண்ட நெடுங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் கஸ்தூரி தொடரில் அப்பாவி அம்மாவாக வரும் லதா பாவம் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியான கதாபாத்திரம் அவருக்கு இந்த தொடரில் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

செல்லமே ராதிகா

செல்லமே சீரியலில் வரும் ராதிகா காணமல் போன தனது குழந்தையை பற்றி நினைக்கும் போது மட்டும் அவ்வப்போது கண் கலங்குகிறார். இதில் பாசமான அம்மா என்பதை விட பாசக்கார தங்கையாகவே அண்ணன் ராதாரவிக்காக அவர் அதிகம் அழுகிறார்.

ஆண்பாவம் மீரா

நான்கு ஆண் பிள்ளைகளின் பாசக்கார அம்மாவாக நடித்துள்ள மீரா மருமகளை பிடிக்காத மாமியாராகவும் வெளுத்து வாங்குகிறார். இந்த தொடர்களில் வரும் அம்மாக்களைப் பார்த்தால் அம்மா என்றாலே ஒன்று அழுபவராக இருக்க வேண்டும். இல்லையெனில் மருமகளுக்கு பிடிக்காத மாமியாராக இருக்கவேண்டும் அல்லது சுயநலமியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இனிமேலாவது புதிதாக சீரியல் இயக்கும் இயக்குநர்கள் அம்மாக்களின் அழுகையை நிறுத்துவார்களா?

Comments