கவிப்பேரரசின் 'முப்பது ஆண்டு முத்துக்கள்'!!!

Thursday, April, 26, 2012
கவிப்பேரரசு வைரமுத்து திரைப்படங்களுக்காகவும், மற்றும் பல்வேறு தலைப்புகளின் கீழும் ஆயிரக்கணக்கான பாடல்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். எத்தனை நூற்றாண்டுகளானாலும் அழிக்க முடியாத பல திரைப்பட பாடல்கள், கவிதைகள், உலகம் முழுவதும் தமிழர்களிடையே உலா வந்து கொண்டிருக்கின்றன. 'முப்பது ஆண்டு முத்துக்கள்' என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் 200 பாடல்களை தேர்வு செய்து அந்த பாடல்கள் பிறந்த கதைகளையும் அவர் குரலிலேயே பதிவு செய்துள்ள பாட்டுப்பேழை (சி.டி) வெளியிடப்பட்டுள்ளது. இந்த சி.டி.யோடு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது:- என் அன்புக்குரியவர் நீங்கள்; 200 பாடல்களையும் கேளுங்கள்: இரவின் மடியிலும், இளைப்பாறும் நொடியிலும், நீண்ட பயணத்தின் நெடுஞ்சாலைகளிலும் இந்தப் பாடல்கள் உங்களைத் தூங்கவிடாமல் தாலாட்டக் கூடும். என்னோடு சேர்ந்து நீங்கள் 'ஹலோ எப்.எம்' வானொலிக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பாடல்கள் ஒலிக்கும் போதெல்லாம் உங்களோடு நானிருப்பேன்; என்னோடிருங்கள் எப்போதும்; இசையும் தமிழுமாய் இணைந்து செல்வோம். இசையோடு தமிழிருந்தால் வேறென்ன வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 'ஹலோ எப்.எம்'முக்காக வைரமுத்து நடத்திய நிகழ்ச்சியின் தொகுப்பே இந்த பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments