முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ரஜினி ரசிகை நான்! - த்ரிஷா பெருமிதம்!!!

Saturday, April, 14, 2012
முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் தீவிர ரஜினி ரசிகை நான். இப்போதும் அவரப் படத்தை அதே மனநிலையில்தான் பார்க்கிறேன், என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

த்ரிஷா இப்போது இரு தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். விஷாலுடன் சமரன் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

தெலுங்கில் அவரது புதிய படம் தம்மு வெளியாகிறது. இதையொட்டி அவர் கூறுகையில், "உலகிலேயே எனக்கு பிடித்த இடம் சென்னைதான். சென்னை எனது தாய் வீடு. இங்கு நான் விரும்பாத இடங்களே கிடையாது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை. அதில் பயணப்படும் போது சொர்க்கத்தில் இருப்பதுபோல் ஒரு பீலிங் இருக்கும். அங்குதான் எனக்கு பிடித்தமான ரிசார்ட்கள் உள்ளன. அடிக்கடி அந்த சாலையில் பயணிப்பதை விரும்புவேன்.

நான் வளரும்போது தமிழ் சினிமாவை அதிகம் தெரியாது. மாடலிங்கில் ஈடுபட்ட பிறகுதான் திரையுலகுக்கு நெருக்கமானேன்.

திரையுலகுக்கு வருவதற்கு முன்னால் சினிமாவில் எனக்கு தெரிந்த மூன்று பேர் ரஜினி, கமல், மணிரத்னம் மட்டும்தான். வீட்டிலும் அவர்களின் படங்களை பார்க்கத்தான் அனுமதிப்பார்கள்.

அதிலும் முதல் நாள் ரஜினி படங்களை பார்த்த அனுபவங்கள் மறக்க முடியாதவை. இப்போது நடிகையாகி விட்டதால் முன்பு மாதிரி முதல் ஷோவில் ரஜினி படங்களை பார்க்க முடியாது. ஆனால் அதற்கும் முன்பே ப்ரிவியூ ஷோ பார்ப்பேன். ஆனால் நான் எங்கே அவர் படத்தைப் பார்த்தாலும் ஒரு ரஜினி ரசிகருக்கு இருக்கும் உணர்வுகளுடனேயே அவரது படங்களைப் பார்க்கிறேன்.

ரஜினியை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா என உலகம் முழுவதும் தெரியும். அவர் இங்கு வசிப்பதால் சென்னையையும் வெளிநாட்டினர் தெரிந்து வைத்துள்ளனர்.

இந்தியா பற்றி அவ்வளவாக தெரியாத பலர் ரஜினியை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். வெளிநாடுகளில் நம்மிடம் அவர் பெயரைச் சொல்லி, அவர் வசிக்கும் ஊரிலிருந்து வருகிறீர்களா என்று கேட்கும்போது உண்மையிலேயே பெருமையாக இருக்கும்.

எனக்கு தமிழ் ரசிகர்களை மிகப் பிடிக்கும். அவர்கள் தலையில் மட்டமான எந்த விஷயத்தையும் திணிக்க முடியாது. நல்ல படங்களை மட்டுமே பார்க்கின்றனர். திறமையிருந்தால் புதுமுக நடிகர்களையும் ஊக்கப்படுத்துகின்றனர்.

காரணமிருந்தால் தவிர, ஹீரோக்களைப் பாராட்டுவதில்லை. தெலுங்கு மொழியில் இதைப் பார்க்க முடியாது. அங்கே ஹீரோக்களை அப்படி துதிக்கிறார்கள்!," என்றார்.

Comments