வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஆதரவாக வீடு அபகரிப்பு: வழக்குப் பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!

Friday, April 06, 2012
மதுரை::கும்பகோணத்தில் நடிகை "வெண்ணிற ஆடை' நிர்மலா தூண்டுதலில், உறவினர்களை மிரட்டி வீட்டைவிட்டு வெளியேற்றிய வழக்கில், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் சவுராஷ்டிரா பெரியதெருவை சேர்ந்த வைஷ்ணவி தாக்கல் செய்த மனு: எனது தந்தை லட்சுமணன் இறந்துவிட்டார். தாத்தா பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான வீட்டில் நானும், தாயும் வசித்து வந்தோம். இந்த வீடு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எங்களுக்கும், பாட்டி ருக்மணி மற்றும் அத்தை "வெண்ணிற ஆடை' நிர்மலா (எ) சாந்திக்கும் இடையே பிரச்னை உள்ளது. சாந்தி தூண்டுதல் பேரில் செல்வம், "யானை'குமார், "மண்ணெண்ணெய்' ராஜா எங்களை மிரட்டி வீட்டை காலி செய்தனர். நான் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், எஸ்.ஐ., கவிதா மற்றும் செல்வம், "யானை'குமார், "மண்ணெண்ணெய்' ராஜா மீது நடவடிக்கை எடுக்கவும், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் தாழைமுத்தரசு ஆஜரானார்.

நீதிபதி: சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஏ.டி.எஸ்.பி., அறிக்கையில் உள்ளது. அந்த சொத்தை குமார்,"மண்ணெண்ணெய்' ராஜா மலிவான விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிகிறது. இது நில அபகரிப்புக்குச் சமமானது. புகார் மீது, போலீசார் நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது. இதுபோன்ற சொத்துப் பிரச்னையில், குண்டர்கள் தலையிடுவதை போலீசார் ஊக்குவிக்கக்கூடாது. மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மனுதாரருக்கு சொத்தில் பங்கு உண்டு. அவர் யார், யார் மீது புகார் அளித்துள்ளாரோ, அவர்கள் மீது ஏப்., 9 க்குள் வழக்குப் பதிவு செய்ய தஞ்சாவூர் எஸ்.பி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Comments