கோடையில் ரிலீசாக இருந்த கமல், அஜித், சூர்யா, கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்!!!

Wednesday,April,25,2012
தமிழ் திரையுலகினர் கோடையில் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய ஆர்வப்படுவது உண்டு. அப்போது கூட்டம் மற்ற நாட்களைவிட அதிகமாக இருக்கும். வசூலும் எகிறும்.

முந்தைய திரையுலக வரலாற்றை புரட்டினால் முன்னணி நடிகர்களின் படங்கள் கோடையில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியதை அறிய முடியும். ரஜினியின் படையப்பா 1999 ஏப்ரல் 10-ந்தேதியும், கமலின் இந்தியன் 1996 மே 9-ந்தேதியும் ரிலீசானது. இதுபோல் விஜயின் கில்லி, அஜீத்தின் சிட்டிசன், சூர்யாவின் அயன், விக்ரமின் சாமி போன்ற மெகாஹிட் படங்கள் கோடை காலங்களிலேயே ரிலீஸ் செய்யப்பட்டன. கார்த்தியின் பையா படமும் 2010 கோடையில் வந்தது.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டு கோடை காலத்தில் பெருமளவு படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக இந்த கோடையில் ஏப்ரல், மே மாதங்களில் முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வருகின்றன.

கமலஹாசனின் விசுவரூபம், அஜீத்தின் பில்லா-2, சூர்யாவின் மாற்றான், கார்த்தியின் சகுனி போன்ற படங்களை கோடையில் ரிலீஸ் செய்யப் போவதாகத்தான் படப்பிடிப்பு துவங்கும்போது அறிவித்தனர். ஆனால் அப்படங்கள் வரவில்லை.

பெப்சி தொழிலாளர் போராட்டம் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. எனவே திட்டமிட்டபடி கோடையில் அப்படங்களை வெளியிட முடியவில்லை. ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பயந்தும் சில படங்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐ.பி.எல்., கிரிக்கெட் சினிமாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் ரிலீசான ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிகரமாக ஓடுகிறது.

Comments