திசைமாறிப்போன திரையுலக மோதல்: தவிப்பில் தயாரிப்பாளர்கள்: அதிர்ச்சி பின்னணி!!!

Sunday, April 15, 2012
திரையுலகின் சுவாசமாக இருக்கிற தயாரிப்பாளர்களுக்கும், உடலாக இருக்கிற தொழிலாளர் அமைப்புக்கும் (பெப்சி) இடையே தொடங்கிய மோதல், "கிளைமேக்சை' நெருங்கி விட்டது; அடுத்ததாய், "சுபம்' போட்டு, சுமுகநிலை வந்து விடும் என்ற நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில், அடுத்த கட்ட மோதல்கள் அரங்கேறத் துவங்கியுள்ளன.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களின் பிடியில் சிக்கித் தவித்த சினிமாத்துறை, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் மூச்சு விடும் என்ற நம்பிக்கையும், சமீபத்திய நிகழ்வுகளால் சிதைந்து போயுள்ளது. அடுத்தடுத்த பிரச்னைகளை உருவாக்கி, திரையுலகின் நிம்மதியைக் கெடுக்கும் வகையில், ஒரு கும்பலின் செயல்பாடு மீண்டும் தற்போது தலை தூக்கியுள்ளதாகக் கூறுகின்றனர் அனுபவம் வாய்ந்த திரையுலக பிதாமகர்கள்.

திடீர் அதிருப்தி குரல்: "பெப்சி' தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காகத் துவங்கிய திரையுலக யுத்தம் பல அதிரடித் திருப்பங்களோடு தொடர்ந்த நிலையில், தமிழக அரசின் தலையீடு, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை அமைதிப்படுத்தி, போராட்டத்தைத் திரும்பப் பெற செய்தது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரும், இனி திரையுலகப் பணிகள், "ஸ்டார்ட்' ஆகிவிடும் என்ற நம்பிக்கையோடு வீடு திரும்பும் முன்பே, "கட்' செல்லும் விதமாய் தயாரிப்பாளர் சங்கத்தில் அதிருப்திக்குரல் எழுந்தது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் 20 பேர் ராஜினாமா செய்து விட்டதாக அதிர்ச்சித் தகவல் பரவியது.

குழப்பத்தின் பின்னணி: "என்னதான் நடக்கிறது?' என்ற கேள்விக்கு விடையளித்துப் பேசிய மூத்த திரையுலக பிரமுகர் ஒருவர் கூறியதாவது: அமைச்சர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்று, பேச்சுவார்த்தை முடிவுக்கு ஒப்புக்கொண்டு, கையெழுத்திட்டு திரும்பும்போதே, தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளாக உள்ள சிலர், திடீரென "பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை; வேலை நிறுத்தத்தை தொடர வேண்டும்; படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது' என்று எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர். இதோடு, தாங்கள் ராஜினாமா செய்வதாக சிலரும், அதற்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் சிலரிடமும் கையெழுத்துப் பெற்று கொடுத்துள்ளனர். இதில் கையெழுத்திட்ட பலருக்கு, எதற்காக கையெழுத்திட்டோம் என்பது கூட தெரியாது. தயாரிப்பாளர்கள் நலன் சார்ந்து இந்த முடிவு எடுக்கப்படவில்லை. திரையுலகில் அமைதி ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் ஒரு கும்பலின் கைக்கூலிகளாக மாறியுள்ள சிலர் ஏற்படுத்தியுள்ள குழப்பம்தான் இது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு சான்றாக, எதிர்ப்பு குரல் எழுப்பி, பிரச்னையை ஓயவிடாமல் செய்யும் சிலரின், "நிஜ' முகங்களை பட்டியலிட்டார் அந்த பிரமுகர்.

* எதிர்ப்புக் குரல் எழுப்பிய முக்கிய நிர்வாகி ஒருவர், "டிவி' நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார். திரையுலகிலும், "டிவி' தொழிலிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு தனியார் "டிவி'யின் கையாளாக மாறியுள்ள இவர், அவர்களின் கண் அசைவிற்கு ஏற்ப, திரையுலகில் குழப்பத்தை ஏற்படுத்த முதலில் கொடி பிடித்துள்ளார்.

* அமைச்சருடனான பேச்சுவார்த்தையின்போது, சுமுகநிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக முரண்பட்டு பேசி, வாக்குவாதம் செய்து வெளியேறினார் ஒரு தயாரிப்பாளர். கடந்த ஆட்சிக் காலத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக அவர் மீது எழுந்த புகாரில் இருந்து, காப்பாற்றப்பட்டதற்கு அவர் காட்டிய நன்றிக்கடன்தான் இந்தச் சம்பவம்.

* தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டடம் கட்டும் போது மணல், இரும்பு, செங்கல் என அனைத்தையும், தனது கட்டுமான நிறுவனத்தில் இருந்து, "சப்ளை' செய்தவர் ஒரு தயாரிப்பாளர். சங்கத்தின் பொறுப்பில் உள்ள அவர் அதற்காக போட்டுக் கொண்ட, "பில்' தொகை பிரமாண்டமானது. தற்போது அடுத்த கட்டடப் பணிகள் நடக்கவுள்ள நிலையில், தற்போதைய தலைவர், இவருக்கு உடன்பட்டு வரமாட்டார் என்பதால், அவரை வெளியேற்றும் நோக்கோடு அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளார் இவர்.

* கடந்த ஆட்சிக்காலத்தில் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் மிரட்டி, அவர்களை ஆதிக்கம் செலுத்திய தனியார் திரைப்பட நிறுவனத்தின், "அடியாள்' போல செயல்பட்ட இன்னொரு தயாரிப்பாளர், தற்போது தன் விசுவாசத்தைக் காட்ட, திரையுலகில் பிளவுக்கு முன் நின்று முயற்சிக்கிறார்.

* "சாய்மீரா' நிறுவனத்தின் மோசடிக்கு உடந்தையாக இருந்த ஒருவரும், சங்கத்தின் சார்பில் புத்தகம் வெளியிடுவதாகக் கூறி, "கல்லா' கட்டிய ஒருவரும், தற்போதைய தலைவர் பதவியில் இருந்தால், தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்பதால், எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.

* ஒரு நடிகரின் மனைவியும், "டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளருமான மற்றொருவர், தன் வருவாய்க்கு வழி செய்யும் தனியார், "டிவி'க்கு விசுவாசம் காட்ட, தயாரிப்பாளர்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை முன்னின்று செய்து வருகிறார். "சீனியர்' தயாரிப்பாளர் மகன் ஒருவரும் இந்த கூட்டத்தில் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வருகிறார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் எழுந்துள்ள இந்த மோதலின் பின்னணி குறித்து விளக்கிய அந்த பிரமுகர், "மொத்தத்தில் திரையுலகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற சக்திகளின் தூண்டுதால் இந்த அதிருப்திக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. சினிமா தயாரிப்பாளர்கள் என்ற பெயரில், தனியார், "டிவி'க்கு விசுவாசமாய் செயல்படும் இவர்களின் உண்மை முகங்களை தயாரிப்பாளர்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்' என்று சொல்லி முடித்தார். திரையுலகப் பயணத்தில் தங்கள் உடமைகளை இழந்தாலும், இன்னும் உயிர்பிடிப்போடு, சினிமாவை விடாமல் காதலிக்கும் தயாரிப்பாளர்கள் பலர், இந்த திசைமாறிப் போன மோதலைக் கண்டு தவித்துப் போயுள்ளனர். மோதலைத் துண்டிவிடும் பின்னணி சக்திகளின் முகத்திரை கிழிந்தால்தான், இவர்களது தவிப்பு அடங்கும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

"தலை' மேல் கோபம் ஏன்? தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள, எஸ்.ஏ., சந்திரசேகரின் பதவியை குறிவைத்துத்தான் பிரச்னைகளைத் தூண்டி விட்டுள்ளனர் என்கின்றனர் முன்னணி தயாரிப்பாளர்கள். திரையுலக இயக்குனர் ஒருவரிடம் பேசியபோது, "கடந்த ஆட்சியில் திரையுலகம் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்தபோது, அதற்கு கட்டுப்படாமல், குரல் கொடுத்தவர் சந்திரசேகர். அதோடு, தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.,விற்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தவர். அப்போதிருந்தே, அவரை வீழ்த்தும் நோக்கில் செயல்பாடுகள் துவங்கி விட்டன' என்றார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தயாரிப்பாளர் சங்கத் தலைவராகத் தேர்தல் போட்டியை எதிர்கொண்டு, சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டார். அவர் பொறுப்பேற்றபின், கேபிள், இணையதளம் உள்ளிட்டவற்றின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு வந்து சேர வேண்டிய தொகையைப் பெற்றுத் தந்தார். கடந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட பல தயாரிப்பாளர்களுக்காக பரிந்துபேசி, நிவாரணம் பெற்றுத் தந்துள்ளார். அதோடு, "பெப்சி' விவகாரம் முடிந்தபின், குறிப்பிட்ட தனியார் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றிய, 200 கோடி ரூபாய் வரையிலான, "செட்டில்மென்ட்' தொகையை பெற்றுத்தர முடிவு செய்துள்ளார். இதற்காக, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் தலைவர் பதவியில் தொடர்ந்தால், தங்களுக்கு ஆபத்து; திரையுலகில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற அச்சத்தில், அவரைக் குறிவைத்து காய் நகர்த்தப்படுவதாக கூறுகின்றனர் திரையுலகினர். தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின்போது பேசிய அமைச்சர் செல்லபாண்டியன், "தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நியாயமாக நடந்து கொள்கிறார்; பேசுகிறார். ஆனால், அவரோடு இருக்கும் மற்ற நிர்வாகிகள் தேவையற்ற வாதங்களை செய்வது ஏன்?' என்று கேட்டதை உதாரணமாகக் கூறுகின்றனர் இவர்கள்.

உண்மை நிலையை புரிந்து கொள்வாரா முதல்வர்? தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும் என்பது ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்து. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், அதிருப்தியாளர்கள் சமீபத்தில், அ.தி.மு.க.,வில் சேர்ந்துள்ள, இப்ராஹிம் ராவுத்தரை பகடைக்காயாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில், அதன் கவுரவ செயலர் முரளிதரன், இது தொடர்பாக வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்றில், ராவுத்தர் தலைமையில், "அட்ஹாக்' கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி, இனி வரும் காலங்களில், அவர் தலைமையில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சந்திரசேகர், கவுரவ செயலர் தேனப்பன், பொருளாளர் தாணு ஆகியோர் பெயரில் நேற்று மாலை ஒரு விளம்பரம் வெளியானது. இதில், "தலைவர் உள்ளிட்டவர்களை கலந்தாலோசிக்காமல் நடக்கவுள்ள இந்த முறையற்ற கூட்டம் குழப்பத்தை ஏற்படுத்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இருக்கும்போது, "அட்ஹாக்' கமிட்டி அமைக்கத் தேவையில்லை' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தலைமைப் பதவிக்கு ஒருவரைக் கொண்டு வருவதன் மூலம், திரையுலகை தங்கள் பிடியில் கொண்டு வர ஒரு கும்பல் முயற்சிப்பதாகவும், அதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அ.தி.மு.க., சார்பு பிரமுகரையே கொம்பு சீவி விட்டு, ஆட்சியாளர்களை ஏமாற்ற நடக்கும் இந்த சதியை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. கோடிகளில் புழங்கும் தமிழ்த் திரையுலகில் கடந்த சில நாட்களாக நடக்கும் மோதல், வேலைநிறுத்தம் காரணமாக, 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திரையுலகைப் பற்றி நன்கு அறிந்த தமிழக முதல்வர், அவர்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர், இப்பிரச்னையின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே திரையுலகைச் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Comments