பெப்சி ஸ்ட்ரைக் அறிவித்துள்ள ஏப் 7ம் தேதி முதல் நாங்கள் வேலை செய்வோம்! - எஸ்ஏ சந்திரசேகரன்!!!

Thursday, April 05, 2012
திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி காலவரையற்ற முழு ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ள தினமான ஏப்ரல் 7 முதல், அதை எதிர்த்து தீவிரமாக பணிகளைத் தொடங்குவோம். அனைத்து படப்பிடிப்புகளும் நடக்கும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), 50 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழி படங்களின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்றன.

காலப்போக்கில் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் பிரிந்து, தனித்தனி கூட்டமைப்பை தொடங்கி விட்டார்கள். இங்கு மட்டும் தென்னிந்திய தொழிலாளர் அமைப்புடன் இணைந்து வேலை செய்து வந்தோம்.

அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் (பெப்சி), தமிழ்ப்பட உலகின் இன்றைய நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல், பலவிதத்தில் தமிழ் படங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறார்கள்.

பெப்சி அமைப்பை சேர்ந்தவர்கள் இங்கே வேலை நிறுத்தம் செய்துவிட்டு, பிறமொழி படங்களில் போய் வேலை செய்வார்கள். இங்கு நடைபெறும் வேலை நிறுத்தத்தால் அவர்களுக்கு நஷ்டம் அல்ல. தமிழ்ப்பட தயாரிப்பாளர்களின் கதி என்ன? எந்த காலகட்டத்திலும் வேலை நிறுத்தம் கூடாது என்பதுதான் நடைமுறை.

தமிழ்ப்படங்களுக்கு என தனியாக ஒரு தொழிலாளர் அமைப்பு இருந்தால் நல்லது என்று தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதை நாங்கள் தீர்மானமாக நிறைவேற்றினோம்.

தமிழ்ப்பட உலகின் நிலைமையையும், தயாரிப்பாளர்களின் நிலைமையையும் புரிந்து கொண்டு, தமிழ் படங்களுக்கு தனியாக யாராவது ஒரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கினால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு தொழிலாளர்களுடன் விரோதம் கிடையாது. அவர்களுடன் எங்களுக்கு பகை இல்லை.

வருகிற 7-ந் தேதி முதல் படப்பிடிப்பை நிறுத்துவோம் என்றும், படம் தொடர்பான மற்ற வேலைகளையும் நிறுத்துவோம் என்றும் பெப்சி அமைப்பை சேர்ந்தவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். 7-ந் தேதி முதல் நாங்கள் வேலை செய்வோம். வேலை நிறுத்தம் செய்ய நாங்கள் தயாராக இல்லை. எந்த தொழில்நுட்ப கலைஞரோ, தொழிலாளியோ எங்களை நம்பி வரும் பட்சத்தில், அனைவரையும் அரவணைத்து, இணைந்து வேலை செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.

பேட்டியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர்கள் டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, செயலாளர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு, பட அதிபர்கள் கோவை தம்பி, கே.ராஜன், எச்.முரளி, வி.சேகர், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் இருந்தனர்.

Comments