மொழி, இனம் காக்க குரல் கொடுங்கள் இயக்குனர் பாரதிராஜா அழைப்பு!!!

Sunday, March 04, 2012
விருதுநகர்:""இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ,நாம் வாய் மூடிய ஊமையாக இருந்து விட்டோம். இனியாவது நாம் ,தமிழ் மொழி, இனம் காக்க நாம் குரம் கொடுக்க வேண்டும்,'' என, இயக்குனர் பாரதிராஜா கூறினார்.விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரியில் நடந்த 50 வது ஆண்டு விழா, நிறுவனர் விழாவில் அவர் பேசியதாவது: இன்டர்நெட், கணினியில் வளர்ச்சியடைந்திருந்தாலும், கல்லூரி வாசல் முதல் ஆடிட்டோரியம் வரை கோலங்கள் வரையப்பட்டிருப்பதை பார்க்கும் போது ,எம் தமிழ் பெண்கள் கலாசாரத்தை மறக்க வில்லை என்பதை காணமுடிகிறது .

எல்லோருக்கும் எல்லா சக்தியையும் ஆண்டவன் கொடுத்துள்ளான். அதை வேண்டிய நேரத்தில் பயன்படுத்த வேண்டும். பிள்ளையை பெற்றெடுக்கும் பெண்ணாக மட்டுமில்லாமல், நீ செல்ல வேண்டிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்க்கையும், வகுப்பறையும் படியுங்கள் வெற்றி பெறலாம். ஒன்று கிடைக்கவில்லையா மற்றொன்றை தேடு, நிச்சயம் கிடைக்கும். மண் ,மொழி, கலாசாரம், இனம், தாய், தந்தை, குருவை மனதில் வைத்தாலே ,நீ உலகம் முழுக்க சுற்றி வரலாம். இலங்கையில் இரண்டு லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது ,தமிழர்களாகிய நாம், வாய் மூடிய ஊமையாகவும், கண் மூடிய குருடர்களாகவும் இருந்து விட்டோம். நம் மொழி, இனத்தை பாதுகாக்க வேண்டுமானால், தமிழர்களாகிய நாம் குரல் கொடுக்க வேண்டும், என்றார். கல்லூரி செயலாளர் மதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வ மீனாட்சி, இணைச் செயலர் இனிமை,அசோக் சக்கரவர்த்தி கலந்து கொண்டனர். மாணவி சுந்தரவள்ளி நன்றி கூறினார்.

Comments