நயன்தாராவுக்கு டப்பிங் பேச நட்சத்திரங்கள் மறுப்பு!:-தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்த நயன்தாராவின் படம் தமிழில் ரிலீஸ்!!!

Saturday, March, 31, 2012
நயன்தாரா, பாலகிருஷ்ணா படத்துக்கு டப்பிங் பேச பிரபல நடிகர், நடிகைகள் மறுத்துவிட்டனர். என்.டி.பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்த படம் ஸ்ரீராமராஜ்யம். இப்படத்துக்கு டப்பிங் பேச நடிகர், நடிகைகள் மறுத்தனர். இதுபற்றி பட தயாரிப்பாளர் கிரண் கூறியதாவது: 14 ஆண்டு வனவாசத்தில் ராமர், சீதை அனுபவித்த சோதனைகளை சொல்லும் புராண படமாக உருவாகி உள்ளது ஸ்ரீராமராஜ்யம். ராமர், சீதையாக என்.டி.பால கிருஷ்ணா, நயன்தாரா நடித்துள்ளனர். தெலுங்கில் இப்படம் ரிலீஸ் ஆகிவிட்டது. தமிழில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து பிரபல நடிகர், நடிகைகளை டப்பிங் பேச அழைத்தபோது மறுத்துவிட்டனர். இலக்கண சுத்தமாக தமிழில் டப்பிங் பேச ஆள் கிடைக்கவில்லை.

இதனால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பின்னர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் பாலகிருஷ்ணாவுக்கு பேச கேட்டோம். சுத்த தமிழில் பேச தனக்கு 3 நாள் அவகாசம் தேவை என்று நேரம் எடுத்துக் கொண்டு பேசிக்கொடுத்தார். நயன்தாராவுக்கு பாடகி சின்மயி பேசினார். மற்றபடி ராஜேஷ், கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பேசினார்கள். தமிழில் இப்படத்தை புரமோஷன் செய்ய நயன்தாராவிடம் கேட்டபோது அரை மணி நேரம் ஒதுக்கி பேசித்தருவதாக கூறினார். ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கிரண் கூறினார்.

தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்த நயன்தாராவின் படம் தமிழில் ரிலீஸ்!!!

நயன்தாரா தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்த படம் ஸ்ரீராம ராஜ்ஜியம். ராமராக பாலகிருஷ்ணா நடித்தார். கோசலையாக கே.ஆர்.விஜயா, பூமா தேவியாக ரோஜா மற்றும் நாகேஸ்வரராஜ், ஸ்ரீகாந்த், பிரமானந்தம் என்பவர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்தார். பாபு இயக்கினார். இப்படம் கடந்த வருடம் ஆந்திராவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது.


இதை தமிழில் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. நயன்தாராவுக்கு பின்னணி பாடகி சின்மயி டப்பிங் பேசுகிறார். தமிழில் வசனத்தையும் பாடல்களையும் பிறைசூடன் எழுதியுள்ளார். 'டப்பிங்' பணிகள் முடிந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தமிழ் புத்தாண்டையொட்டி இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து நாட்டுக்கு திரும்பி பட்டாபிஷேகம் சூட்டிக் கொள்கிறார். பின்னர் மக்கள் கருத்துக்கேற்ப சீதையை பிரிகிறார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக நாட்டுக்கு சென்று லவ- குசா என இரு குழந்தைகளை பெற்று பல சோதனைகளை சந்தித்து அவற்றில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது போன்ற காட்சிகளுடன் இப்படம் தயாராகி உள்ளது.

இந்த படத்தை ஜே.பனீந்திரகுமார் என்ற கிரண் தயாரித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கூடுதல் பிரிண்ட்களுடன் படம் திரையிடப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Comments