தயாரிப்பாளர்கள்- பெப்சி இடையே மோதல்: படப்பிடிப்புகள் இன்று ரத்து!!!

Monday, March 19, 2012
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கும் ஊதிய உயர்வு சம்பந்தமாக மோதல் நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் மீனம்பாக்கம் அருகே நடந்த கார்த்தியின் அலெக்ஸ்பாண்டியன் படப்பிடிப்பில் ரகளை ஏற்பட்டது.

தொழிலாளர்கள் படப்பிடிப்புக்கு தாமதமாக சென்று நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், படப்பிடிப்பை தொழிலாளர்கள் நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோல் விதார்த் நடிக்கும் காட்டுமல்லி படப்பிடிப்பும் சர்ச்சையால் நிறுத்தப்பட்டது. பெப்சி போக்கை கண்டித்து தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை இன்று ரத்து செய்தனர்.

உள்ளூர், வெளியூர் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. நடிகர், நடிகைகள் ஓட்டல்களில் முடங்கினர். சென்னையில் உள்ள ஸ்டூடியோக்கள் வெறிச்சோடின. திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் வருத்தம் தெரிவிக்கும் வரை ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ளமாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் அவசர கூட்டம் தியாகராய நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் இன்று காலை நடந்தது.

இக்கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. பெப்சி உறவை துண்டித்து தன்னிச்சையாக படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் பேசியவர்கள் வற்புறுத்தினர். இதுபோல் பெப்சி நிர்வாகிகளும் இன்று அவசரமாக கூடி பேசினார்கள்.

Comments