கடலன்னை கருணை கிடைத்ததா பாக்யராஜுக்கு?!!!

Wednesday, March 28, 2012
இராம நாராயணன், பேரரசு போன்றவர்களிடம் பணியாற்றிய வீ.ஜே.ஜெகநாதன் இயக்கும் படம் 'இவனும் பணக்காரன்'. 'அப்பாவி' படத்தில் கௌதம் என்ற பெயரில் நடித்து பெயர் வாங்கிய ஹீரோ இப்படத்திற்காக சிதேஷ் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு நடிக்க, அவருக்கு ஜோடியாக கனியா நடிக்கிறார். படத்தின் இரண்டாவது பாதியில் நாயகன் என்கிற அளவிற்கு முக்கியத்துவப் பாத்திரத்தில் கே.பாக்யராஜ் நடிக்கிறார். கே.பாக்யராஜை வைத்து வேதாரண்யத்தில் படப்பிடிப்பை நடுக்கடலில் நடத்திக் கொண்டிருந்தார் இயக்குநர். ஒரு படகிலிருந்து குதித்து நீந்தி இன்னொரு படகில் பாக்யராஜ் ஏறும் காட்சி அது. அதற்குத் தயார் நிலையில் இருந்தபோது ஒரு விசைப்படகு விரைந்து வந்து கொண்டிருந்தது. அதிலிருந்த மீனவர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள். நான்கு மீனவர்கள் நீச்சலடித்து வந்து, 'சிங்கள இராணுவம் எங்களைத் துரத்தி வருகிறது, நீங்கள் ஷூட்டிங் நடத்தினால் மீனவர்கள் என்று உங்களையும் சுட்டுவிடுவார்கள்' என்று எச்சரிக்கைத் தந்தனர். தலை தப்பினால் போதும் என்று ஷூட்டிங்கை பேக்கப் செய்து வேகமாகப் பயணம் செய்து கரையேறினார்கள். 'அன்று நாங்கள் பிழைத்தது கடலன்னை மற்றும் கடவுளின் கருணை என்று நெகிழ்வுடன் கூறுகிறார் இயக்குநர்.

நாகப்பட்டினம் ரோட்டில் ஒரு ரவுடி கும்பல் நாயகன் சிதேஷை துரத்திக் கொல்ல வர அவர் தப்பிப்பதற்காக பாலத்திலிருந்து குதித்து கடலில் விழுந்து விடுகிறார். உப்பளம் அருகே கடலில் ஒதுங்கிய சிதேஷை மருத்துவம் படிக்கும் நாயகி கனியா காப்பாற்றி வைத்தியம் செய்கிறார். குணமான சிதேஷை அனுப்ப முயன்ற கனியாவின் அப்பாவைப் பார்த்தவுடன் சுயநினைவு மறந்தவர் போல் நடித்து அங்கேயே தங்குகின்றார் நாயகன். பிறகு என்ன என்பது பரபரக்கும் க்ளைமாக்ஸ்" என்கிறார் கதைப்பற்றி கூறும் இயக்குநர் வி.ஜே.ஜெகநாதன். ஏமாற்றத்தில் இருக்கும் கனியாவை சிதேஷ் எப்படி சமாதானப்படுத்தினார், அவர் யார்? ஏன் பொய் சொல்லி தங்கினார்? அவர்கள் எப்படி அவனை ஏற்றுக் கொண்டார்கள் என்பது மீதிக்கதை. இந்த படத்தில் சிதேஷ், கனியா, கே.பாக்யராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மனோபாலா, ரமேஷ் கண்ணா, ரவிமரியா, 'சங்கர் குரு' ராஜா, பாரதிகண்ணன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, ரேகா, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசை: ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு: கே.சி.ரமேஷ். எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ். கலை: சீனு. நடனம்: சிவசங்கர், எஸ்.எல்.பாலாஜி, பாப்பி, ஏ.ஆர்.ஜெகன். சண்டைப்பயிற்சி: தளபதி தினேஷ். பாடல்கள்: வாலி, நா.முத்துக்குமார். வசனம்: பேரரசு. கதை, திரைக்கதை, இயக்கம்: வீ.ஜே.ஜெகநாதன். தயாரிப்பு: எம்.சீனிவாசன். ஜே.ஜே.ஸ்வீட் என்டர்டெய்ன்மெண்ட் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேதாரண்யம், வேளாங்கன்னி, கோடியக்கரை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் நடைபெற்றிருக்கிறது. விரைவில் திரைக்கு வர விறுவிறுப்பாக தயாராகி வருகிறது 'இவனும் பணக்காரன்'. யம்மாடியோவ்.... அசுரனுக்கிட்டயிருந்து தப்பிச்சிருக்கீங்க... இப்ப புரிஞ்சிருக்குமே மீனவர்களின் கஷ்டம். நித்தம் நித்தம் உயிருக்கு போறாடும் இவுங்களுக்காக என்ன செய்ய போறீங்க சார்..?

Comments