தேசிய விருதால் பெருமைப்படுகிறேன்: நடிகை வித்யாபாலன் பேட்டி!!!

Thursday, March 08, 2012
சென்னை;;வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
“த டர்ட்டி பிக்சர்” என்ற இந்தி படத்தில் நடித்ததற்காக இவ்விருது கிடைத்துள்ளது. இப்படம் சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். தேசிய விருது கிடைத்தது பற்றி வித்யாபாலன் அளித்த பேட்டி வருமாறு:-

மகளிர் தினத்தையொட்டி எனக்கு தேசிய விருது கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். என்னால் இதை நம்ப முடியவில்லை. கனவு நிஜமான மாதிரி உள்ளது. இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர் மிலன் லுத்ரியாவுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். நமது நாட்டின் உயரிய விருது இது. இவ்விருதை பெற்றமைக்காக கர்வப்படுகிறேன்.

டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது. அவரை ஒரு செக்ஸ் நடிகையாகவே பலரும் பார்த்தனர். எனவே சில்க் வேடத்தில் நடிக்க வேண்டாம் என பலர் என்னிடம் வற்புறுத்தினர். அதை, பொருட்படுத்தாமல் நடித்தேன். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒன்றி போய் நடித்தேன்.

உணர்வு பூர்வமாகவும் கேரக்டரோடு கவர்ந்தேன். இந்த படத்தின் வெற்றி நடிகைகளை ஊக்குவிப்பதாக அமைந்தது. அந்த படத்தில் உள்ளது போன்ற கேரக்டரில் நடிக்க இப்போது ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு முன் இது மாதிரி வேடங்களில் நடிக்க அவர்கள் விரும்பியது இல்லை. ஆர்ட் படங்களுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் எண்ணத்தை டர்ட்டி பிக்சர் படம் மாற்றியுள்ளது.

கமர்ஷியல் படங்களும் விருது பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் ரிலீசான போது பிரச்சினைகள் ஏற்பட்டன. படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என கண்டனம் எழுந்தது. போலீசுக்கும் போனார்கள். ஆனால் படம் வெளியானதும் நிலைமை மாறியது.

நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. இப்போது தேசிய விருதும் கிடைத்துள்ளது. எனக்கு கிரீடம் கிடைத்தது போல் சந்தோஷப்படுகிறேன். இந்திய சினிமா வரலாற்றில் எனது பெயரும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நிறைந்த மனதோடு இருக்கிறேன்.

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

Comments