இயக்குநர் சிகரம் பிரச்சினையை தீர்த்து வைப்பாரா?.

Saturday, March 24, 2012
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் - பெப்சி தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை தற்போது விஸ்வரூபமடைந்து வருகிறது.
"அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவில் ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர். பெப்சி அமைப்பை உடைக்கும் நோக்கில் புதிய முடிவுகளை எடுக்க நினைத்தது தயாரிப்பாளர்கள் சங்கம். ஆனால் அம்முயற்சியை தற்காலிகமாக தள்ளிவைக்குமாறு கேட்டு கொண்டுள்ளார் இயக்குநர் கே.பாலசந்தர். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிட்டு இருப்பது:

1. ஏப்ரல் 30-ம் தேதி வரை புதிய தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எதுவும் துவக்கப்படக்கூடாது.

2. தற்போது படப்பிடிப்பில் உள்ள தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் 2012-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதிவரை தற்போது நடைபெற்றுவரும் முறையில் தொடர்ந்து நடைபெறலாம். ஆனால் மே மாதம் 2-ம் தேதியில் இருந்து தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் புதிதாக அமைக்கவுள்ள தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பைச் சார்ந்த தொழிலாளர்களோடு மட்டுமே நடைபெற வேண்டும்.

3. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட முடிவுகளை எல்லாத் தயாரிப்பாளர்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மேற்கண்ட முடிவுகளை மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்க விதி எண் 14-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்து அதை இன்று அறிவிக்கலாம் என்று இருந்தோம்.

ஆனால் மூத்த தயாரிப்பாளர் இயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்கள் மேற்கண்ட முடிவுகளின் செயல்பாட்டை தற்காலிமாக தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில், இப்பிரச்சினைகளைத் தற்காலிகமாக தள்ளிவைத்து அவருடன் கலந்து ஆலோசித்து பின்பு அறிவிக்கின்றோம்" என்று அவ்வறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள். பாலசந்தரின் சமரச முயற்சிகள் எடுபடுமா என்பது போகப் போகத்தான் தெரியும். இவ்வறிக்கையின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொள்ளவில்லை. துணைத்தலைவர் தியாகராஜன், தேனப்பன், சிவா உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். ஓட்ட படகை ஒட்ட வைக்க நினைக்கிறீங்க.... ஒடையாம இருந்தா சரி!

Comments