வேறு பெண் பார்த்ததால் விரக்தி அடைந்தார்: வினோத்குமார் தற்கொலைக்கு பெற்றோர்தான் காரணம்-நடிகை அல்போன்சா தம்பி ராபர்ட் பேட்டி!

Wednesday,March,07,2012
நடிகை அல்போன்சா தம்பி ராபர்ட். இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆவார். அல்போன்சா காதலர் வினோத்குமாரை இவர்தான் அடித்து கொன்றார் என்று பெற்றோர் பழி சுமத்தினர். ஆனால் ராபர்ட்டுக்கு இதில் தொடர்பு இல்லை என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வினோத் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து ராபர்ட் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வினோத்குமார் சாவுக்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வேலை செய்ய ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருக்கிறேன். வினோத்குமாரை நாங்கள் சாய் என்று அழைப்போம். என் அக்காள் அல்போன்சாவும் அவரும் தீவிரமாக காதலித்தனர்.

திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தனர். குடிப்பழக்கத்தின் தீமையை வலியுறுத்தி ஆல்பம் ஒன்றை உருவாக்கினேன். அதில் பாடல், இசை, நடனம் எல்லாவற்றையும் நானே செய்தேன். அப்படத்தில் வினோத்குமாரை நடிக்க வைக்கும்படி அல்போன்சா என்னிடம் வற்புறுத்தினார்.

வினோத்குமார் ஏற்கனவே கவசம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படம் நின்று போனது. இந்த ஆல்பத்தில் நடித்தால் மீண்டும் சினிமா சான்ஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்று அல்போன்சா நிர்ப்பந்தித்தாள். நானும் அதை ஏற்று வினோத்குமாரை நடிக்க வைத்தேன். அவர் ஒரு பைசா கூட செலவு செய்ய வில்லை.

எல்லா செலவையும் நானே பார்த்துக் கொண்டேன். நான் அந்த ஆல்பத்தில் நடிக்காமல் அல்போன்சா சொன்னதற்காக வினோத்குமாரும் நமக்கு சொந்தமாகி விட்டாரே என்று அவருக்கு விட்டு கொடுத்தேன். அந்த அளவுக்கு எல்லோரும் அவர் மேல் பாசம் வைத்திருந்தோம்.

வினோத்குமார் சாவதற்கு முந்தைய நாள் அல்போன்சா துபாயில் இருந்து திரும்பி வந்தார். நான் அவர் வீட்டுக்கு போகவில்லை. மறுநாள் 5-ந்தேதி அதிகாலை எனக்கு வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போன் வந்தது. பதறியடித்து ஓடினேன். அங்கு வந்த வினோத்குமாரின் தந்தை என்னை பார்த்து நீதான் அடித்து கொலை செய்து விட்டாய் உன்னை சும்மா விட மாட்டேன் என்று கத்தினார்.

அல்போன்சா-வினோத்குமார் குடியிருந்த பிளாட்டை சுற்றி நிறைய கேமிராக்கள் உள்ளன. லிப்டிலும் கேமிரா உள்ளது. 5 நாட்களாக அந்த வீட்டுக்கே நான் வரவில்லை என்று அந்த கேமிராக்கள் மூலம் ஊர்ஜிதமாகி உள்ளது. அதோடு போனிலும் பேசவில்லை என்று செல்போனை ஆய்வு செய்து போலீசார் தெரிந்து கொண்டனர்.

எனது டான்ஸ் பள்ளியில் ஐந்து ஆண்டுக்கு முன் வினோத்குமார் நடனம் கற்க்க வந்தார். கதாநாயகனாக நடிக்க சான்ஸ் தேடிட்டு இருக்கேன் என்றார். சில மாதங்கள் என்னிடம் நடனம் கற்றார். பிறகு எனக்கு காலில் பலத்த அடிபட்டு நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. உடனே டான்ஸ் ஸ்கூலை மூடி விட்டேன். அப்புறம் அவரை சந்திக்கவே இல்லை.

கவசம் படத்தில் வினோத்குமார் நடித்தபோது, அப்படத்துக்கு எனது அண்ணன் மனோஜ் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார். அவர் மூலம் எங்கள் குடும்பத்துடன் நெருக்கமானார். ஒருநாள் வேளாங்கண்ணி கோவிலுக்கு வேனில் நாங்கள் போனோம். அப்போது நானும் வருகிறேன் என்று வேனில் வந்து ஏறிக் கொண்டார். அந்த பயணத்தில்தான் அல்போன்சாவுக்கும் வினோத்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. எனது பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அக்காள் ஏற்கனவே திருமணமானவர். முதல் கணவர் துபாயில் இருக்கிறார். அவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டு வினோத்குமாரை மணப்பதாக கூறி இருந்தார். வினோத்குமார் தற்கொலை செய்த அன்று இரவு 12 மணிக்கு ஊரில் இருந்து அவரது அம்மா போனில் பேசி உள்ளார். அவர் போன் வந்ததில் இருந்து டென்ஷனாக இருந்துள்ளார்.

அல்போன்சாவிடம் நான், நீ குழந்தை மூவரும் செத்து போகலாம் என்று கேட்டுள்ளார். அதற்கு அல்போன்சா லூஸ் மாதிரி பேசாதே இப்பதான் சந்தோஷமாய் இருக்கோம் நாம் வாழனும் என்று கூறியுள்ளார். பெற்றோர் ஊரில் வினோத்குமாருக்கு பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்யா விட்டால் செத்துப்போவேன் என்று அவரது தாய் சொல்லி இருக்கலாம். வினோத்குமார் அம்மா செல்லம். தாய் சொல்வதை மீற முடியாமலும் அல்போன்சாவை மறக்க முடியாமலும் தவித்துள்ளார். இதுவே தற்கொலை முடிவுக்கு தூண்டியுள்ளது.

பாத்ரூம் போய்ட்டு வர்றேன் என்று சொல்லிப்போனவர் நேராக இன்னொரு அறைக்கு போய் தூக்கில் தொங்கி விட்டார். அவர் சாவதற்கு முன் சந்தோஷமாக இருந்துள்ளார். குழந்தையுடனும் அக்காள் உடனும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தது ஐ பேடில் பதிவாகி உள்ளது.

துண்டு கட்டிய கோலத்தில் அக்கா வெளியே அலறியப்படி வந்தது கேமிராவிலும் பதிவாகி உள்ளது. அக்காளும் வினோத்குமாரும் நல்லா இருந்தால் போதும் என்றுதான் எல்லோரும் ஆசைப்பட்டோம்.

இவ்வாறு ராபர்ட் கூறினார்.

Comments